55
நோர்வே நாட்டின் இளவரசி மெட்டே-மேரிட்டின் (Crown Princess Mette-Marit) மூத்த மகனான 29 வயதுடைய மாரியஸ் போர்க் ஹோய்பிக்கு (Marius Borg Hoiby), இரண்டு பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகள் உட்பட பல குற்றங்களுக்காக 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஒஸ்லோ மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2018 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், தூங்கிக்கொண்டிருந்த அல்லது சுயநினைவற்ற நிலையில் இருந்த பெண்களுக்கு எதிராக இந்த அத்துமீறல்கள் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர் மீதான இரண்டு பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், மற்ற இரு வன்புணர்வு குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இளவரசியின் மகன் மாரியஸ் போர்க் ஹோய்பி தன் மீதான கடுமையான குற்றச்சாட்டுகளை மறுத்த போதிலும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதைப்பொருள் பயன்பாட்டு ஆதாரங்கள், அவரே பதிவு செய்த குறுஞ்செய்திகள் மற்றும் காணொளிகள் ஆகியவற்றின் அடிப்படையில் குற்றம் உறுதி செய்யப்பட்டது. அவர் எதிர்கொண்ட குடும்ப வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட 40 குற்றச்சாட்டுகளில் 34 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரச குடும்பப் பின்னணியைக் கொண்ட ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு, ‘சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்’ என்பதை உணர்த்துவதாக அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக மாரியஸின் சட்டத்தரணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love

