மேற்கு ஆசியப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா – ஈரான் இடையே எட்டப்பட்ட தற்காலிக அமைதி உடன்படிக்கையை அடுத்து, அதன் அடுத்தகட்டத் தொழில்நுட்ப மற்றும் அணுசக்தி விவகாரங்கள் குறித்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் இன்று (2026 ஜூன் 21, ஞாயிற்றுக்கிழமை) அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.
லெபனானில் இஸ்ரேல் – ஹெஸ்புல்லா இடையே நீடிக்கும் மோதல்கள் காரணமாக, சுவிட்சர்லாந்தின் பூர்ஜன்ஸ்டாக் (Bürgenstock) நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த இப்பேச்சுவார்த்தை தற்காலிகமாகப் பிற்போடப்பட்டிருந்த நிலையில், இரு நாட்டுப் பிரதிநிதிகளும் அங்கு சென்றடைந்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் சுமுகமாக ஆரம்பமாகிறது.
அமெரிக்கப் பிரதிநிதிகளாகத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance), வெள்ளை மாளிகையின் விசேட தூதர் ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் சுவிட்சர்லாந்தை சென்றடைந்துள்ளனர். ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தலைமையிலான மத்திய வங்கி மற்றும் எண்ணெய் துறை அதிகாரிகள் குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், இராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் கட்டார் நாட்டு இராஜதந்திரிகள் ஆகியோர் உத்தியோகபூர்வ மத்தியஸ்தர்களாகச் செயற்படுகின்றனர்.
லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் நேற்று (சனிக்கிழமை) ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் மூடுவதாக அறிவித்திருந்தமை உலக அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி லெபனானில் தாக்குதல் நடத்துவதால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே நீரிணையை மூடியதாக ஈரானியக் கூட்டு இராணுவத் தலைமையகம் அறிவித்தது. ஈரானின் இந்த அறிவிப்பை அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) முற்றாக நிராகரித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை எனவும், சனிக்கிழமை மட்டும் 17 மில்லியன் பேரல் எண்ணெயைக் சுமந்த 55 வணிகக் கப்பல்கள் எவ்வித தடையுமின்றி இந்நீரிணையைக் கடந்து சென்றுள்ளதாகவும் CENTCOM பேச்சாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அடுத்த 60 நாட்களுக்குள் ஈரான் இறுதி அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கும் கப்பல்களுக்கு அமெரிக்கா சார்பில் புதிய கடல்வழிக் கட்டணங்கள் (Tolls) விதிக்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
#BurgenstockTalks2026 #JDVanceSwitzerland #StraitOfHormuzControversy #USIranPeaceProcess #MiddleEastCeasefire

