Home இலங்கைவடக்குக்கான ரயில் சேவைகளை அதிகரிக்க புதிய இயந்திரங்கள் கொள்வனவு: திணைக்களம் அதிரடி நடவடிக்கை!

வடக்குக்கான ரயில் சேவைகளை அதிகரிக்க புதிய இயந்திரங்கள் கொள்வனவு: திணைக்களம் அதிரடி நடவடிக்கை!

by admin
கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவைகளை முழுமையாக மீள ஆரம்பிப்பதில் நிலவும் பிரதான தடையான ரயில் இயந்திரப் பற்றாக்குறைக்குத் தீர்வாக, புதிய இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற விசேட உயர்மட்டக் கலந்துரையாடலின் போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. பாதுகாப்பான மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் போக்குவரத்து என்பதால், வடக்கு மாகாணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி ரயில் சேவைகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் இதன்போது வலியுறுத்தினார். பயணிகளின் வசதிக்கேற்ப ரயில் நேர அட்டவணைகளை மாற்றியமைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த பொது முகாமையாளர், இயந்திரப் பற்றாக்குறைக்கு மத்தியில் தற்காலிகமாக பகல் நேர ரயில் சேவைகளை ஒழுங்கமைப்பது குறித்து துரித நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அத்துடன், ‘யாழ். ராணி’ ரயில் சேவையில் அவசியமான மாற்றங்களை மேற்கொண்டு அதனை வவுனியா வரை நீடிப்பதற்கும், தற்போது அநுராதபுரம் வரை மாத்திரம் பயணிக்கும் சரக்கு ரயில் சேவையை காங்கேசன்துறை வரை விரிவுபடுத்துவதற்கும் இக்கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.
கடந்த காலங்களில் சொகுசு நகர்சேர் கடுகதி, ஸ்ரீதேவி, உத்தராதேவி, யாழ்தேவி மற்றும் இரவு தபால் ரயில் எனப் பல சேவைகள் தினசரியும், வார இறுதி நாட்களில் ‘யாழ் நிலா’ ரயிலும் இயக்கப்பட்டன. ஆனால், தற்போது சொகுசு ரயில் மற்றும் இரவு தபால் ரயிலுடன், ஒருநாள் விட்ட ஒருநாளே யாழ்தேவி இயக்கப்படுகிறது. இதனால் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் தினசரி சேவைகளாக மாற்றுமாறு பொதுமக்கள் விடுத்து வரும் கோரிக்கைகளுக்கு இந்த புதிய கொள்வனவு நடவடிக்கை பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More