56
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வழியே போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இலங்கைக்குப் பயணம் செய்ய முயன்ற இலங்கை பெண் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் இலங்கையைச் சேர்ந்த மெரினா ஆனி (58) என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு இலங்கை கடவுச்சீட்டு மூலம் இந்தியா வந்த இவர், பின்னர் குவைத் சென்றுவிட்டு, 2003ஆம் ஆண்டு விருதுநகரைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே குடியேறியுள்ளார்.
இந்தியாவில் தங்கியிருந்த காலகட்டத்தில், தனது இலங்கை குடியுரிமையை மறைத்து ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற இந்திய அடையாள ஆவணங்களை இவர் சட்டவிரோதமாகப் பெற்றுள்ளார். அந்த ஆவணங்களின் அடிப்படையில் இந்தியக் குடியுரிமை பெற்றவர் போல் போலியாக இந்தியக் கடவுச்சீட்டையும் பெற்று, அதன் மூலம் தனது சொந்த நாடான இலங்கைக்குத் திரும்ப விமான நிலையம் வந்தபோது அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
விமான நிலைய வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர் (FRRO) இவரது ஆவணங்களை ஆய்வு செய்தபோது முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். மத்திய குற்றப்பிரிவு காவற்துறையினர் அந்தப் பெண்ணைக் கைது செய்து, அவரிடமிருந்த போலி இந்திய ஆவணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Spread the love

