Home இலங்கைதையிட்டி விகாரையை அண்மித்த பவானி வீதி விடுவிப்பு வழக்கு – மூன்றாவது தடவையாக கட்டளைக்கு திகதி குறிப்பு

தையிட்டி விகாரையை அண்மித்த பவானி வீதி விடுவிப்பு வழக்கு – மூன்றாவது தடவையாக கட்டளைக்கு திகதி குறிப்பு

by admin

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டிப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ‘திஸ்ஸ ரஜமகா விகாரை’ வளாகத்திற்குள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை மீட்கும் நடவடிக்கைக்குத் தடை விதிக்குமாறு பலாலி காவற்துறையினர் தாக்கல் செய்த வழக்கின் கட்டளை (Order) வழங்கும் திகதியை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

நேற்று (2026 ஜூன் 25, வியாழக்கிழமை) இவ்வழக்கு தீர்ப்புக்காகக் கட்டளை மேடைக்கு வந்த போது, மல்லாகம் நீதவான் நீதிமன்றம் தனது இறுதி உத்தியோகபூர்வக் கட்டளையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 06-ஆம் திகதி வழங்குவதாகப் புதிய திகதியிட்டு ஒத்திவைத்துள்ளது.

வலி. வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான வரலாற்றுப் பாரம்பரியமிக்க “பவானி” வீதியை விகாரை நிர்வாகம் அடாத்தாக வேலி அமைத்துக் கையகப்படுத்தியுள்ள விவகாரம் குடாநாட்டில் நீண்டகாலமாகப் பாரிய அரசியல் மற்றும் சிவில் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.

 கடந்த ஏப்ரல் மாதம் 28-ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச சபையினால் பவானி வீதி உத்தியோகபூர்வமாக அளவீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத வேலியை விகாராதிபதி உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் பிரதேச சபையே அதனை அகற்றி அதற்கான செலவை விகாரை நிர்வாகத்திடம் வசூலிக்கும் எனவும் தவிசாளரால் உத்தியோகபூர்வக் கடிதம் அனுப்பப்பட்டது.

இதற்கு எதிராக விகாராதிபதி பலாலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். இம்முறைப்பாட்டின் அடிப்படையில் பிரதேச சபை தவிசாளரை அழைத்த பலாலி காவற்துறையினர், “வேலியை அகற்றினால் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு நல்லிணக்கம் (Harmony) பாதிக்கப்படும், எனவே இப்பணியைக் கைவிட வேண்டும்” என அச்சுறுத்தும் தொனியில் தெரிவித்துள்ளனர். எனினும், மக்களின் பொது வீதியை விடுவித்தே தீருவோம் எனத் தவிசாளர் உறுதியாக மறுத்துவிட்டார்.

இதனை அடுத்து, பிரதேச சபையின் வீதி மீட்பு நடவடிக்கைக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பலாலி காவற்துறையினர் மல்லாகம் நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்தனர்:

 காவற்துறையின் ஒருதலைப்பட்சமான கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளரை மே மாதம் 11-ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டது. பிரதேச சபை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, உள்ளூராட்சி அதிகாரச் சட்டத்தின்படி பிரதேச சபைக்குரிய எல்லை மற்றும் பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்கும் சட்டபூர்வ உரிமை தவிசாளருக்கு உண்டு என மிக வலுவான வாதங்களை முன்வைத்தார்.

 இவ்வழக்கின் கட்டளை கடந்த மே மாதம் 21-ஆம் திகதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் ஜூன் 25-ஆம் திகதிக்கு (நேற்று) ஒத்திவைக்கப்பட்டது. எனினும், நேற்று நடைபெற்ற அமர்வின் போதும் கட்டளை ஆயத்தமாகாததால், எதிர்வரும் ஓகஸ்ட் 06-ஆம் திகதிக்கு நீதிமன்று மீண்டும் திகதியிட்டுள்ளது.

#ThaitittiViharaCase  #MallakamCourtOrder #MASumanthiranPC   #ValiNorthPradeshiyaSabha #PalalyPolicePetition

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More