Home இலங்கைதேசிய ரீதியில் மாபெரும் போராட்டத்திற்குத் தயாராகும் வடமாகாண கடற்றொழிலாளர்கள்!

தேசிய ரீதியில் மாபெரும் போராட்டத்திற்குத் தயாராகும் வடமாகாண கடற்றொழிலாளர்கள்!

by admin
வடமாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குப் புதிய அரசாங்கமும், கடற்றொழில் அமைச்சரும் இதுவரை முறையான எந்தவொரு தீர்வுகளையும் முன்வைக்கவில்லை எனக் குற்றம் சாட்டி, தேசிய ரீதியில் மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுக்க வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விசேட பொதுக்கூட்டம் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில், இணையத்தின் உப தலைவர் அன்டனி ஆல்பர்ட் தலைமையில் இன்றைய திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் கேமன் குமார மற்றும் மாவட்ட இணைப்பாளர்களும் கலந்துகொண்டு மீனவர்களின் தற்போதைய அவலநிலை குறித்து விரிவாகக் கலந்துரையாடினர். குறிப்பாக, இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள் மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மீனவர்களுக்குத் தீர்வு காண்பதே இப்போராட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
இப்பொதுக்கூட்டம் நிறைவடையும் தருவாயில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் எதிர்பாராத விதமாக அங்கு வருகை தந்து மீனவப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அமைச்சரிடம் மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை நேரடியாக முன்வைத்த போதிலும், தமக்கான நிரந்தரத் தீர்வுகள் எட்டப்படும் வரை தேசிய ரீதியிலான போராட்டக் குழுவை அமைத்து, ஏனைய மாகாண மீனவர்களையும் ஒன்றிணைத்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்பதில் வடமாகாண கடற்றொழிலாளர்கள் உறுதியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More