57
யாழ்ப்பாணம், வலி. வடக்கு, தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வசாவிளான் குட்டியாபுலம் பகுதியில் உள்ள 2.5 ஏக்கர் தனியார் காணியை அரச காணி எனக் கூறி, அதன் உரிமையாளர்களை வெளியேறுமாறு தெல்லிப்பழை பிரதேச செயலர் பிறப்பித்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
பின்னணி மற்றும் நீதிமன்ற விசாரணை:
கடந்த 2025ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதி, குறித்த காணியில் இருந்து தனியாரை வெளியேறுமாறு தெல்லிப்பழை பிரதேச செயலரால் அறிவித்தல் விடுக்கப்பட்டது. எனினும், அக்காணி அரசுக்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்கும் எவ்வித ஆவணங்களையும் பிரதேச செயலகம் சமர்ப்பிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து காணி உரிமையாளர்களால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு விசாரணையின் போது, காணி உரிமையாளர்கள் தரப்பில் காணி அளவீட்டுத் திணைக்களம், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், யாழ்ப்பாணம் காணிப் பதிவகம் மற்றும் விவசாய, கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அந்த ஆவணங்களின்படி, குறித்த 2.5 ஏக்கர் காணியும் அரசினால் ஒருபோதும் சுவீகரிக்கப்படவில்லை என்பதும், அது சட்டப்பூர்வமாக ஒரு தனியார் காணி என்பதும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.
நீதிமன்றின் தீர்ப்பு:
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், தெல்லிப்பழை பிரதேச செயலரின் வெளியேற்றல் அறிவித்தலை ரத்து செய்யும் உறுதிகேள் எழுத்தாணையையும் (Writ of Certiorari), இந்த விவகாரம் தொடர்பாக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் மனுதாரர்களுக்கு எதிராக மேலதிக நடவடிக்கைகள் எதையும் எடுக்கக் கூடாது என உத்தரவிடும் தடையீட்டு எழுத்தாணையையும் (Writ of Prohibition) பிறப்பித்து தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு, வலி. வடக்கில் நீண்டகாலமாக நிலவி வரும் காணிப் பிரச்சினைகளில் தனியார் நில உரிமையாளர்களுக்குக் கிடைத்துள்ள மிக முக்கிய சட்ட வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
Spread the love

