42
வியட்நாமின் பு குவோக் (Phu Quoc) தீவு அருகே இன்று (11 ஜூலை) நிகழ்ந்த சுற்றுலாப் படகு விபத்தில், குறைந்தது 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர். ஹோன் மே ரூட் (Hon May Rut) தீவிலிருந்து அன் தோய் (An Thoi) துறைமுகத்தை நோக்கி 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 4 பணியாளர்களுடன் பயணித்த அதிவேக சுற்றுலாப் படகு, கடல் கொந்தளிப்பாக இருந்த நிலையில் கரையிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் திடீரென கவிழ்ந்ததாக வியட்நாமிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகு கவிழ்ந்தவுடன் அதிலிருந்த பயணிகள் கடலில் தூக்கி வீசப்பட்டதுடன், சிலர் படகுக்குள் சிக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் படையினர் மற்றும் அருகிலிருந்த படகுகளின் உதவியுடன் 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்திற்கான காரணம் மோசமான வானிலை, பலத்த அலைகள் அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து வியட்நாம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஹனோயிலுள்ள இந்தியத் தூதரகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தகவல் மற்றும் உதவி வழங்க ஹனோய் மற்றும் ஹோ சி மின் நகரங்களில் கட்டுப்பாட்டு அறைகள் (Control Rooms) அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்திய மற்றும் வியட்நாம் அதிகாரிகள் இணைந்து மீட்பு மற்றும் உதவிப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
இந்த துயரச் சம்பவம் இந்திய சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Spread the love

