53
சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளரைத் தெரிவு செய்வதற்காக 2026 ஜூலை 21ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த அவசரக் கூட்டம், நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனையைத் தொடர்ந்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உப தவிசாளர் ஞா. கிஷோர், சபையில் தாம் ஆற்றிய உரையை அடிப்படையாகக் கொண்டு பதவிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்திருந்த எழுத்தாணை மனு, வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் நேற்று (வெள்ளிக்கிழமை) மூன்றாவது முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னதாக, 2026 ஜூலை 13ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின் போது, எதிர்மனுதாரர்களான வட மாகாண ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் தனிநபர் விசாரணை அதிகாரி ஆகியோர் தங்களது ஆட்சேபனைகளை கடந்த வெள்ளிக்கிழமையிற்குள் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், குறித்த காலக்கெடுவுக்குள் அவை தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த நிலையில், வழக்கு நிலுவையில் உள்ளபோதும், புதிய உப தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அவசரக் கூட்டத்திற்கு உள்ளூராட்சி ஆணையாளர் அழைப்பு விடுத்திருந்தமை குறித்து, மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கலாநிதி கு. குருபரன் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
இதையடுத்து, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் அரச சட்டத்தரணி, வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளருடன் கலந்தாலோசனை நடத்தினார். அதன் பின்னர், வழக்கின் விவாதம் நிறைவடையும் வரை புதிய உப தவிசாளர் தெரிவுக்கான கூட்டம் ஒத்திவைக்கப்படும் என உள்ளூராட்சி ஆணையாளர் தரப்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூலை 21ஆம் திகதி நடைபெறவிருந்த புதிய உப தவிசாளர் தெரிவுக் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், எதிர்மனுதாரர்கள் தங்களது ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்காக வழக்கு ஜூலை 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், இறுதி விவாதம் ஜூலை 24ஆம் திகதி நடைபெறுமென வடக்கு மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இறுதி விவாதம் நிறைவடைந்த பின்னர், நீதிமன்றம் நிர்ணயிக்கும் பின்னைய நாளொன்றில் வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love

