ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால், ஜனாதிபதி கதிரையில் ஒரு மணிநேரமேனும் தான் இருக்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிவிலகி வீதியில் இறங்கி மகிந்தவுடன் இணைந்து செயற்படத் தயராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு, தான் இந்த ஜனாதிபதி கதிரையில் இருக்கவில்லை எனக்குறிப்பிட்டுள்ள அவர் தான் . இந்தக் கதிரையில் இருக்கும் வரையிலும் வடக்கு, கிழக்கை மீண்டும் இணைக்கப்போவதும் இல்லை என்பதுடன் சமஸ்டியை வழங்கப் போவதும் இல்லை எனவும் அவ்விரண்டையும் அடையவேண்டுமாயின் முதலில் தன்னை கொலைச் செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்றரை வருடங்களாக இடம்பெற்ற ஆட்சியில் பெறுமதியில்லாத நிலையிலேயே தான் இருந்ததாகவும் 2015 ஆம் ஆண்டு மஹிந்தவின் ஆட்சியிலிருந்து எவ்வாறு அதிருப்தியுடன் விலகினேனோ அதனைவிட அதிகமான அதிருப்தியுடனேயே தற்போது அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.