தமிழகச் சிறைகளில் உள்ள 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதிலுமுள்ள சிறைகளில் உள கைதிகளுக்கு அடிப்படை உரிமைகள், வசதிகள் இல்லாமல் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து பொதுநல வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும், சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதன்படி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்துச் சிறைகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு, அங்குள்ள நிலைமைகளை அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்றையதினம் தாக்கல் செய்த அறிக்கையில் அரசு மருத்துவமனைகளுக்குக் கைதிகளைக் கொண்டுசெல்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகச் சிறை அதிகாரிகளே தெரிவிக்கின்றனர் எனவும் தனிமைச் சிறையில் சில கைதிகளுக்கு மனநலப் பாதிப்பும், பல கைதிகளுக்கு முதுமை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
மேலும் வேலூர், திருச்சி, மதுரை, சிவகங்கை மாவட்டச் சிறைகளில் கைதிகள் மிகக் கொடூரமாக விலங்குகளைவிட மோசமாக நடத்தப்படுகின்றனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதி எதுவும் இல்லை. கழிவறைகள் நோய் பரவுவதற்கு ஏற்ற வகையில் இருக்கிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இது குறித்து அரசின் நிலைப்பாட்டை அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டதுடன் இ வழக்கின் விசாரணையை வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.