2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமே பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும் அதற்கு இடைப்பட்ட காலத்தில் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்தவேண்டியதே அவசியமாகும் எனவும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் அலரிமாளிகையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது பெரும்பான்மை பலம் இருந்தால் அதனை நிரூபிக்கலாம். அதனை தவிர்த்து பாராளுமன்றைக் குழப்புவதானது ராஜபக்ஸவினருக்கு பெரும்பான்மைப் பலம் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற்றுவிட்டதாக சபாநாயகர் அறிவித்ததிலிருந்து அமைச்சரவை கலைந்துவிட்டது. அதனால் பிரதமருக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது. அந்த யோசனையை ரவி கருணாநாயக்க முன்வைத்திருக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒக்டோபர் 26 ஆம் திகதி நடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னர் இந்தப் பிரச்சினை முடிந்துவிடும் என அவர்கள் நினைத்தனர். ஆனால் இந்தப் பிரச்சினை ஐக்கியதேசியக் கட்சிக்கு மட்டுமன்றி முழுநாட்டிலும் பாராரிய பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கின்றது.
எமது மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதியாகிய ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட இந்த செயற்பாடு மக்களின் இறைமைக்கு விடுக்கப்பட்ட பாரிய அடியாகும். நாம் பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கவே போராடுகின்றோம்.
நாம் 19 ஆவது திருத்தத்தை வைத்து முன்சென்றோம். அந்தத் திருத்தமானது மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தியது. ஜனாதிபதியை பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் ஒருவராக மாற்றினோம். ஆனால் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்காக நாம் ஜனாதிபதியாக நியமித்தவர் இன்று பாராளுமன்றத்தை மிதிப்பதற்கு முற்படுகின்றார். நாம் அதற்கு இடமளிக்கமாட்டோம் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.