புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் தேவையை நிறைவேற்றறுவதற்கு, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக, ரணில் தரப்பினர் மீண்டும் ஆட்சிக்கு வர முயல்வதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
முப்பது வருடங்களாக நாட்டில் பாரிய யுத்தம் இடம்பெற்று நாடு பாரிய சவால்களுக்கு உள்ளாகிய போதும் அன்று நாட்டில் ஸ்திரமான அரசாங்கங்கள் இருந்ததாகவும் இதனாலேயே அபிவிருத்தியோடு, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் முடிந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கொண்டுவந்த 19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக நாடு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டில் இன்று பிரதமரோ அமைச்சரவையோ இல்லாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாடு நன்றாக இயங்கிக் கொண்டிருந்தவேளையில், பொய் பிரசாரங்களை மேற்கொண்டு இனவாதத்தை பரப்பி, மகிந்தவை தோற்கடிக்கச் செய்த சூழ்ச்சியிலேயே இந்த நாடு இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கோத்தாபய குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டு வந்து பாராளுமன்றுக்கு அடுத்தபடியாக இரண்டாவது சபையொன்றை உருவாக்கி அதன் ஊடாக ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் முறையை கொண்டு வரவும் வடக்கு – கிழக்கை இணைத்து ஒரு முதல்வரின் கீழ் நிர்வகிக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு என்பது ஒரு நாட்டுக்கு முக்கியமான என தெரிவித்த அவர் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்வரை இந்த நாட்டில், எந்தவொரு பிரச்சினையும் இருக்கவில்லை என்றும் இந்த அரசாங்கம் வந்தபிறகு, இராணுவ புலனாய்வுப் பிரிவினர் கடுமையாக பாதிக்கப்பட்டு பொய்க் குற்றச்சாட்டுக்களால் அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவங்களின் விளைவாகவே, வவுணதீவு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஸ வவுணதீவு சம்பவம் என்பது சாதாரண ஒரு விடயமல்ல என்றும் மீண்டும் ரணில் தரப்பினர் ஆட்சிக்கு வர முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
சர்வதேச சக்திகள், பிரிவினைவாதிகள், புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் தேவைக்கு இணங்க, புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரவே ரணில் தரப்பினர் முயற்சிப்பதாகவும் இது பாரதூரமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.