ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசில் இணைந்து செயற்படுவதற்கு ஏனைய கட்சிகள், தரப்புகளில் இருந்து வரும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரவணைத்துக் கொள்ளுங்கள். புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு அனைவரினதும் ஆதரவு தமக்குத் தேவை என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று முற்பகல் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, அவரைச் சந்திக்க சென்ற போது அவரிடம் சம்பந்தன் இவ்வாறு ஆலோசனை கூறியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரசிங்கவுடன் சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் உடனிருந்துள்ளார்.
புதிய அரசு, இனப்பிரச்சினைத் தீர்வையும் உள்ளடக்கிய புதிய அரசமைப்பை நிறைவேற்றச் செய்வதற்குத் தேவையான பாராளுமன்றப் பலத்தை பெறுவதற்காகத் தனது தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 130 ஆக அதிகரிக்க முயல வேண்டும் எனவும் சம்பந்தன் இந்தச் சந்திப்பின்போது ரணிலிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
வடக்கு, கிழக்குத் தமிழர்களின் விவகாரங்களுடன் சம்பந்தப்பட்ட சில முக்கிய அமைச்சுக்கள் தொடர்பில் நியமிக்கப்படக் கூடிய அமைச்சர்கள் விடயத்தில் தங்கள் எதிர்பார்ப்பையும் நிலைப்பாட்டையும் சம்பந்தனும் சுமந்திரனும் இந்தச் சந்திப்பின்போது ரணிலிடம் வெளிப்படையாகவே வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.