ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளரான ஹனா சிங்கர் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்காவினை நேற்றைய தினம் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது மாலியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த இலங்கை அமைதி காக்கும் படையணியினருக்கு தனது அனுதாபங்களை இராணுவ தளபதியிடம் தெரிவித்துள்ளதுடன் தாக்குதலுக்கு கண்டனமும் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் ஐ.நா. செயலாளர் நாயகமும் இலங்கை அமைதிப்படை இராணுவத்தினர் உயிரிழந்தமைக்கு அனுதாபங்களை தெரிவித்துள்ளதாகவும் அவர் இராணுவ தளபதியிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்த இராணுவத்தினரது குடும்பங்களுக்கு இழப்பீடு திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்குவதாகவும் அவர்களது சடலங்கள் கட்டுநாயக விமான நிலையத்திற்கு கொண்டு வந்து ஐ.நா பாதுகாப்பு சபையின் அனுதாப செய்திகளுடன் அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மாலியில் கடந்த 25ம் திகதி இடம்பெற்ற தாக்குதல் நடவடிக்கையில் இலங்கை அமைதி காக்கும் படையணியினைச் சேர்ந்த இரு இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.