குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் காவல்துறை மா அதிபர் பாரப்படுத்தினார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் உள்பட 5 காவல்துறையினரைக் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
5 காவல்துறை உத்தியோகத்தர்களும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஐவரும் காவல்துறை சேவையில் மீளவும் இணைக்கப்பட்டுள்ளனர்.
வழக்கில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த 5 சந்தேகநபர்களில் இரண்டாவது சந்தேகநபர் எக்கநாயக்க முதியான்சலாகே ஜயவர்த்தன, நான்காவது சந்தேகநபர் தங்கராஜன் லங்காமனன், ஐந்தாவது சந்தேகநபர் கமல விதானகே நவரத்ன பண்டார ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து அரச சாட்சிகளாக மாற்றப்பட்டனர்.
மேலும் கடமைக்கு பொறுப்பாகவிருந்தவரான முதலாவது சந்தேகநபர் சரத் பண்டார திசாநாயக்க மற்றும் சூடு நடத்தியவரான மூன்றாவது சந்தேகநபர் சமர ஆராய்சிலாகே சந்தன குமார சமர ஆராச்சி ஆகிய இருவருக்கும் எதிராக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 296ஆம் பிரிவின் கீழான கொலைக் குற்றச்சாட்டின் கீழ் பிராது பத்திரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, சுருக்கமுறையற்ற விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று (5) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முன்னிலையாகினர்.குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மன்றில் தோன்றினர். வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மன்றில் முன்னிலையானார்.
கொல்லப்பட்ட மாணவர்களின் நண்பர்கள் உள்ளிட்டோரிடம் சாட்சிகள் பெறப்பட்டன. இந்த நிலையில் வழக்கு தொடர் விசாரணைக்காக இந்த மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.