164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் மக்களின் அன்றாட பிரச்சனைகள் , இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுத்து நடவடிக்கைகளுக்கு இனவாதிகளின் செயற்பாடுகள் பின்னடைவுகளை ஏற்படுத்தினாலும் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தீர்வை பெற்று தருவார் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மானிப்பாய் பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
யுத்தத்திற்கு முன்னரான கால பகுதியில் வடக்கு , கிழக்கு மாகாணங்கள் கல்வியில் முன்னிலையில் இருந்தன. தற்போது பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இந்த நிலமையை மாற்றியமைக்க எமது அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
கடந்த கால அரசாங்கத்தினால் போதை பொருட்கள் கட்டவிழுத்து விடப்பட்டன. அதனால் பலர் போதைக்கு அடிமையானர்கள். அவர்களின் திறன்கள் அதன் மூலம் மழுங்கடிக்கப்பட்டது. மற்றும் வன்முறை கலாச்சாரங்களும் ஊக்கிவிக்கப்பட்டன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் , போதை , வன்முறைகளால் பாதிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதனால் பாராளுமன்ற உறுப்பினராக குற்றமற்ற சூழலையும் , சமாதானத்தையும் ,இன ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
வன்முறை சம்பவங்களையும் , போதை பொருள் பாவனையையும் காவல்துறையினரினர் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் காவல்துறையினரின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை.
கடந்த ஆண்டில் 6வயது பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டார். அராலி பகுதியில் கொள்ளையர்கள் வீட்டில் இருந்த வயோதிப பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தினார்கள் இவ்வாறாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்து காணப்பட்டன.
இவ்வாறான சம்பவங்களால் பெண் என்ற ரீதியில் மன நிம்மதி இழந்தேன். குற்ற செயல்களை கட்டுப்படுத்துமாறு அதிகாரிகளை வேண்டினேன். விடுதலைப்புலிகள் இவ்வறான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி இருந்தார்கள். அது பற்றியே அன்றைய தினம் எனது உரையில் குறிப்பிட்டேன். அந்த உரை தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
ஆயுத போராட்டம் மீண்டும் தலை தூக்க வேண்டும் என்றோ , தனி நாடு அமைய வேண்டும் எனவோ , புலிகளை ஆதரித்து பேச வேண்டுமோ என்ற எந்த உள்நோக்கமும் எனக்கிருக்கவில்லை.
சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை , சமாதனம் மலர வேண்டும் என விரும்புபவர். அதற்காகவே செயல்படுபவர் நான் என மேலும் தெரிவித்தார்.
Spread the love