289
யுத்தம் முடிவுக்கு வந்து ஏழரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனினும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து இன்னும் மீளவில்லை.
யுத்தம் காரணமாக பலரும் பல்வேறு வழிகளில் பலவாறாகப் பாதிக்கப்பட்டார்கள்.
அரச படைகளும், விடுதலைப்புலிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட போதும், இரு தரப்பினரும், ஒருவரை ஒருவர் இலக்கு வைத்து நடத்திய பல்வேறு வழிகளிலான தாக்குதல்களிலும் சிக்கி, உயிர் தப்பிய பல்லாயிரக்கணக்கானவர்கள் அவயவங்களை இழந்தும், உள வலுவை இழந்தும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினார்கள்.
இவ்வாறு பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளாகக் குறிப்பிடப்படுபவர்கள் மறுவாழ்வுக்காக, அழிந்து போன தமது வாழ்க்கையின் புனரமைப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களுடைய வாழ்க்கையைப் புனரமைப்பதற்காக அரசாங்கமும் அரச சார்பற்ற நிறுவனங்களும், வேறு பல அமைப்புக்களும் செயற்பட்டு வருகின்றன.
இந்த வகையில் வடமாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளைத் திறம்படச் செய்வதற்கும், அதன் ஊடாக மாற்றுத்திறனாளிகள் உச்ச பயன்களைப் பெறுவதற்குமாக என்பிகோடா என்றழைக்கப்படுகின்ற வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புக்களின் ஒன்றியம் (Northern Province Consortium of Organizations for Rehabilitaiton of Differently Abled – NPCODA) செயற்பட்டு வருகின்றது.
இந்த ஒன்றியம் நேரடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றுவதில்லை. இது நிறுவனங்களுக்கு சேவையாற்றுகின்ற ஒரு நிறுவனமாகும்.
கிளிநொச்சியில் தனது அலுவலகத்தை நிறுவி மாற்றுத்திறனாளிகளுக்காக சேவையாற்றுகின்ற நிறுவனங்களுக்கு அங்கிருந்து இது சேவையாற்றி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓர்ஹான் எனப்படுகின்ற, வவுனியா மாவட்ட வலுவிழந்தோருக்கான புனர்வாழ்வு நிறுவனமே (Organization for Rehabilitation of Handicapped – ORHAN) வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புக்களின் ஒன்றியத்தை 2013 ஆம் ஆண்டு உருவாக்கியது.
இந்த ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்கு முக்கியமாக ஒக்ஸ்பாம் நிறுவனம் உறுதுணையாக இருந்து செயலாற்றி வருகின்றது.
தேவைகளும் சேவைகளும் வித்தியாசமானவை
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சாதாரண மனிதர்களுடைய தேவைகள், அவற்றுக்கான சேவைகள் என்பவற்றில் இருந்து மாற்றுத்திறனாளிகளின் தேவைகளும் சேவைகளும் வேறுபட்டிருக்கின்றன.
மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் உடல் மற்றும் உளவியல் ரீதியில் மிகவும் நுணுக்கமானவை. இதனால் இவர்களுக்கான சேவைகளும் வித்தியாசமானவை. பல வழிகளில் கடினமானவை என்று கூறுவதும் பொருத்தமாக இருக்கும்.
உலக சுகாதார நிறுவனம் மாற்றுத்திறனாளிகளை நான்கு வகைப்படுத்தியிருக்கின்றது. ஒருவரின் உடல் ரீதியான இயலாமையின் அடிப்படையில் இந்த வகைப்படுத்தல் அமைந்திருக்கின்றது.
உடல்ரீதியான இயலாமை (Physical Disability), உளரீதியான இயலாமை (Mental Disablity) அறிவுசார் இயலாமை (Intelectual Disability) புலன்ரீதியான இயலாமை (Sensory Disability) என உலக சுகாதார நிறுவனம் அவற்றைக் குறிப்பிட்டிருக்கின்றது.
இவற்றைவிட இன்னுமொரு வகையினரும் இருக்கின்றனர். ஒன்றுக்கும் மேற்பட்ட இயலாமையைக் கொண்டிருப்பவர்களை அது குறிக்கின்றது. அதனை பல்வகை இயலாமை (Multiple Disability) என குறிப்பிடுகின்றார்கள்.
அங்கக் குறைபாடுடையவர்கள் உடல் ரீதியான இயலாமையுடையவர் என்றும், மனவளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளவர்கள் உளவியல் பாதிப்புக்கு உள்ளாகியவர்கள் உளரீதியான இயலாமையுடையவர் என்றும், வயதுக்கு ஏற்ற அறிவுசார் இயலாமையைக் கொண்டிருப்பவர்களை அறிவுசார் இயலாமையுடையவர் என்றும், உடல்களில் உணர்வற்றிருப்பவர்கள் – முள்ளந்தண்டு வடம் பாதி;க்கப்பட்டு, அதனால் இடுப்புக்குக் கீழ் இயங்காதவர்கள் அல்லது போலியோவினாலும், வாதங்களினாலும் பாதிக்கப்பட்டு, அவயவங்கள் உணர்வற்றிருப்பவர்களையும், கட்புலன் மற்றும் செவிப்புலன் பாதிக்கப்பட்டவர்களையும் உணர்வுசார் இயலாமையுடையவர்கள் என்றும் மாற்றுத்திறனாளிகள் வகைப்படுத்தப்படுகின்றார்கள்.
அதேவேளை, ஒன்றுக்கும் மேற்பட்ட இயலாமையைக் கொண்டிருப்பவர்கள் உடல் ரீதியாக அதேநேரத்தில் உள ரீதியாகவும், அல்லது அறிவுசார் ரீதியாக அல்லது புலன்சார்ந்த நிலையிலும் இயலாமையைக் கொண்டிருப்பவர்கள் பல்வகை இயலாமைக்கு உட்பட்டவர்கள் என குறிப்பிடப்படுகின்றார்கள்.
இலக்கு
கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த யுத்தம் நிறைவுக்கு வந்தபிறகு, மழைக்கு முளைக்கும் காளான்களைப் போன்று மாற்றுத் திறனாளிகளுடன் வேலை செய்வதற்காக சிறு சிறு நிறுவனங்கள் தோற்றம் பெற்று மிக மிக வேகமாக செயற்பட ஆரம்பித்திருந்தன.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புனர்வாழ்வளித்து, அவர்களுடைய வாழ்க்கையைப் புனரமைப்பு செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களும் இந்த நிறுவனங்களுக்குத் தேவையான நிதியுதவியை வழங்கினார்கள்.
பல நிறுவனங்கள் இந்த உதவிகளைப் பெற்று பல்வேறு விதமான பணிகளைச் செய்தாலும், பல நிறுவனங்கள் அந்தப் பணத்தைச் சரியான முறையில் பயன்படுத்தத் தெரியாமல் இருந்தன. ஏனென்றால், அவர்களுக்கு அந்தப் பணியை முன்னெடுப்பதற்குத் தேவையான பயிற்சியும், அனுபவமும் போதாமல் இருந்தது.
இதனால் நிதியுதவி செய்த புலம் பெயர் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் பெரிதாக நிறைவேறவில்லை.
எனவே, இந்த நிறுவனங்கள் எல்லாவற்றையும் ஒரே குடைக்குக் கீழே கொண்டு வந்து, உரிய முறையில் அவர்கள் செயற்படுவதற்குத் தேவையான பயிற்சிகளை வழங்கி, கிடைக்கிற நிதியை மிகத் திறமாகப் பயன்படுத்தி, தேவைகள் மிகுந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் உயர்ந்த சேவையை வழங்கச் செய்யலாம் என்பதே எங்களுடைய இலக்காகும் என்று என்பிகோடா என்றழைக்கப்படுகின்ற வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.சுப்பிரமணியம் கூறுகின்றார்.
எனவே, மாற்றுத்திறனாளிகளுக்காகச் செயற்படுபவர்கள், அவர்களின் தன்மைகளை நன்கு உணர்ந்தவர்களாகவும், அவர்களின் தேவைகளையும், அவற்றை பொருத்தமான வகையில் நிறைவேற்றுகின்ற திறனுடையவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியமாகின்றது.
இதற்கு துறைசார்ந்தவர்கள் மற்றும் அனுபவமுள்ளவர்களின் வழிகாட்டலுடனான பயிற்சியைப் பெற வேண்டியது இன்றியமையாததாக உள்ளது.
அத்துடன் இவ்வாறாக பல்வகைப்பட்ட இயலாமைகளைக் கொண்டுள்ளவர்களுக்கு ஒன்றிணைந்த வகையிலான சேவைகளை வழங்குவதும் முக்கியமாகக் கருதப்படுகின்றது.
இந்த நிலையிலேயே மாற்றுத்திறனாளிகளுக்காகச் செயற்படுகின்ற நிறுவனங்கள், தமக்குள் ஒன்றிணைந்து திறன்விருத்தியுடன் செயற்பட வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் கொள்திறனுடையவர்களாகவும், திறன் விருத்தியடைந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற இரண்டு பிரதான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புக்களின் ஒன்றியம் உருவாக்கப்பட்டிருக்கின்றது என அந்த ஒன்றியத்தின் தலைவர் வி.சுப்பிரமணியம் சுட்டிக்காட்டுகின்றார்.
பலவகையான நிறுவனங்கள்
மாற்றுத்திறனாளிகளைப் போலவே, அவர்களுக்காக சேவையாற்றுகின்ற நிறுவனங்களும் பல வகைப்பட்டவையாக இருக்கின்றன.
வரோட் நிறுவனம் ஒரு தர்மஸ்தாபனம். அது கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்படுகின்றது. உயிரிழை என்பது ஒரு அரச சார்பற்ற நிறுவனம்.
ஆனால் ஒரு நிறுவனம் என்ன நிறுவனம் என்ன வகைப்பட்டது என்;பதைவிட, அந்த நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவையாற்றினால், அது வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புக்களின் ஒன்றியத்தில் இணைத்துக் கொள்ளப்படுகின்றது.
சில நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வியில் மாத்திரம் கவனம் செலுத்துகின்றன.
முல்லைத்தீவு இனிய வாழ்வு இல்லம் மாற்றுத்திறனாளிப் பிள்ளைகளுக்கான பாடசாலையை நடத்தி வருகிறது. ஓர்ஹான் போன்ற நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி, மற்றும் வேறுதுறைகளிலும் சேவையாற்றுகின்றது.
சீட் போன்ற நிறுவனங்கள் விசேட தேவைக்குரியோருக்கான சேவைகளையும் அதேநேரத்தில் அபிவிருத்தி வேலைகளையும் முன்னெடுத்திருக்கின்றன.
வன்னி விழிப்புலனற்றோர் சங்கம், யாழ் விழிப்புலனற்றோர் சங்கம், வாழ்வகம் போன்ற நிறுவனங்கள் விழிப்புலனற்றோர்களுக்கு மாத்திரம் சேவையாற்றுகின்றன. வேறு சில நிறுவனங்கள் செவிப்புலனற்றோர்களுக்கு மாத்திரம் சேவையாற்றுகின்றன.
இன்னும் சில நிறுவனங்கள் செவிப்புலனற்றோருடன் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கும் பணி புரிகின்றன. ஒரு சில நிறுவனங்கள் பல்வகை இயலாமையைக் கொண்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்காகச் செயற்பட்டு வருகின்றன.
ஒன்றியத்தின் சேவைகள்
பொதுவாக மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவையாற்றுகின்ற ஆர்வம் பல நிறுவனங்களிடமும் இருக்கின்றதேயொழிய அதற்குத் தேவையான கொள்திறனும் (Capacity) போதிய வினைத்திறனும் அவைகளிடம் இருப்பதில்லை. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதே வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புக்களின் ஒன்றியத்தின் இலட்சியமாகும்.
இந்த வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான நிறுவனங்களுக்கு (D.P.O – Disabled Peoples’ Organizations) கடந்த மூன்று வருடங்களில் இருபது பயிற்சிப் பட்டறைகள் இந்த ஒன்றியத்தினால் நடத்தப்பட்டிருக்கின்றன.
இந்தப் பயிற்சிப் பட்டறைகள் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு நிறுவனத்தை தலைமையேற்று நடத்துவதற்குரிய தலைமைத்துவப் பயிற்சி, அந்த நிறுவனத்தின் நிதி முகாமைத்துவம், பால்நிலை சமத்துவத்தைப் பேணுகின்ற தன்மை மற்றும் தொழிலாளர் சட்டங்கள் உள்ளிட்ட பல முக்கியமான விடயங்களை பயிற்சிக்குரிய விடயப் பரப்புக்களாகக் கொண்டிருக்கின்றன. துறைசார்ந்த, அனுபவம் மிக்கவர்களினால் இவற்றில் பயற்சிகள் வழங்கப்படுகின்றன.
அது மட்டுமல்லாமல், நிதி முகாமைத்துவம் உள்ளிட்ட முக்கியமான விடயங்களைக் கையாள்வதற்குரிய மென்பொருள் கருவிகளும் மாற்றுத்திறனாளிகளுக்காகச் செயற்படுகின்ற நிறுவனங்களுக்கென விசேடமாக உருவாக்கி வழங்கப்பட்டிருக்கின்றன.
அத்துடன், நிறுவனங்கள் அதிகாரபூர்வமான அந்தஸ்தைப் பெறுவதற்காக அவற்றை அரச திணைக்களங்களில் பதிவு செய்வதற்கான உதவிகளும், கணக்காய்வுகளை மேற்கொள்வதற்கான வழிமுறை உதவிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புக்களின் ஒன்றியத்தின் எண்ணக்கருவை சரியாகப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் சிறப்பான ஒத்துழைப்பை நிறுவனங்கள் பல வழங்கி வருகின்றன.
அதேவேளை, அந்த எண்ணக்கருவை முறையாகப் புரிந்து கொள்ளாமல் விலகிச் செல்கின்ற நிறுவனங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
அத்தகைய நிறுவனங்களுடன் மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டு, கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அவற்றை ஒன்றியத்துடன் இணைத்து, சிறப்பான முறையில் செயற்படச் செய்வதற்கான வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வி.சுப்பிரமணியம் கூறுகின்றார்.
ஓக்ஸ்பாம் நிறுவனத்தின் பங்கு
என்பிகோடா என்ற வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான நிறுவனங்களி;ன் ஒன்றியத்திற்கு ஐந்து வருட மூலோபாய திட்டத்தை வகுப்பதற்கு துணை புரிந்துள்ள ஒக்ஸ்பாம் நிறுவனம் வேறு பல வழிகளிலும் அதற்கு ஒத்துழைத்து வருகின்றது.
மாற்றுத் திறனாளிகளுக்குச் சேவையாற்றும் நிறுவனங்களை இனங்கண்டு ஒருங்கிணைப்பது, அந்த நிறுவனங்களுக்குத் தேவையான உபகரண உதவிகளை வழங்குவது, நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவது, மூலோபாயத் திட்டம் வரைவது போன்ற விடயங்கள் அவற்றில் முக்கியமானவையாகும்.
வேல்ட் விஷன் நிறுவனம்
அதேவேளை, வேல்ட் விஷன் நிறுவனம் யாழ் மாவட்டத்தில் சங்கானை மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவுகளில் மேற்கொண்டுள்ள குடிநீர், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பிலான வேலைத்திட்டங்களில் வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புக்களின் ஒன்றியத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றது.
வேல்ட் விஷன் நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தப் பிரதேசங்களில் ஆரம்பித்த (சுரசயட ஐவெநபசயவநன றுயவநச ளுயnவையவழைn Pசழதநஉவ – சுஐறுயுளு 3) ஒன்றிணைந்த கிராமிய குடிநீர், சுகாதாரம், ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் அங்குள்ள மாற்றுத்திறாளி குடும்பங்களை எவ்வாறு கையாள்வது, அவர்களுடன் எவ்வாறு செயற்படுவது, அவர்களுக்கான தேவைகளை, அவர்களுக்கு ஏற்ற வகையில் எவ்வாறு இனங்கண்டு, எவ்வாறு வடிவமைத்துச் செயற்படுவது போன்ற அடிப்படை விடயங்களில் இந்த ஒன்றியம் ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்கி உதவியிருக்கின்றது.
அத்துடன், இந்தப் பணிகளில் தேவையான தொழில்நுட்ப சேவை சார்;ந்த பொறுப்புக்களையும் மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்புக்களின் ஒனற்pயம் ஏற்றுச் செயற்பட்டுள்ளது.
குறிப்பாக கழிப்பறை வசதிகளின்றி பாதிக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்குரிய கழிப்பறைகளை நிர்மாணிப்பதற்குரிய மாதிரி திட்டமும் மற்றும் அதனுடன் சார்ந்த தொழில்நுட்ப உதவிகளும் வேல்ட் விஷன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புக்களின் ஒன்றியம் இந்தப் பிரதேசங்களில் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை இனங்காண்பதற்கென மேற்கொண்ட பூரவாங்க ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு வேல்ட் விஷன் நிறுவனம் தனது சேவைகளை முன்னெடுத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் ஒக்ஸ்பாம் நிறுவனம் வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புக்களின் ஒன்றியத்தின் சேவைகளில் தோளோடு தோள்கொடுத்து உறுதுணை புரிந்து வருகின்றது.
அதேவேளை, வேல்ட் விஷன் நிறுவனம் இந்த ஒன்றியத்தின் செயற்திறன்களைத் தனது பணிகளுக்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி இணைந்து செயலாற்றி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மாகாண மத்திய அரசுகளின் ஒத்துழைப்பு
மாற்றுத்திறனாளிகளுக்காக சேவையாற்றுகின்ற நிறுவனங்கள் ஒருகுடையின் கீழ் இணைந்து செயற்படுவதை வடமாகாண சபை வரவேற்றுள்ளது.
இதன் மூலம், மாகாண சபையிலிருந்து எமக்கு பூரண ஒத்துழைப்பு கிடைத்துவருகின்றது என வி.சுப்பிரமணியம் குறிப்பிடுகின்றார்.
குறிப்பாக வடமாகாண முதலமைச்சர், இந்த ஒன்றிணைந்த செயற்பாட்டிற்குப் பூரணமான ஆதரவை வழங்க உறுதியளித்திருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
அதேபோன்று வடமாகாண சுகாதார அமைச்சர், வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ஆகியோரின் கீழ் வருகின்ற அமைச்சு வேலைத்திட்டங்களின் கொள்கைகளில் எமது கோரிக்கைகள் பல உள்வாங்கப்பட்டிருப்பது தங்களுக்கு உற்சாகம் அளித்திருக்கின்றது என்கிறார் வி.சுப்பிரமணியம்..
மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய சரியான கணக்கெடுப்பு தேவை என்பதை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர், கிளிநொச்சி மாவட்டத்தில் பரிட்சார்த்தமான ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டிருந்தார்.
தொடர்ந்து வடமாகாணம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் பற்றிய விரிவான கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதேபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி தொடர்பான விடயங்களில் கல்வி அமைச்சர் ஆர்வம் கொண்டிருக்கின்றார். போக்குவரத்து அமைச்சரும் தனது செயற்திட்டங்களுக்கு உட்பட்ட வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புக்களுக்குரிய உதவிகளை வழங்க முன்வந்துள்ளார்.
அத்துடன், வடமாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் மற்றும் மாவட்ட மட்டங்களில் உள்ள சமூகசேவை உத்தியோகத்தர்கள் ஆகியோருடனும் தொடர்புகளை ஏற்படுத்தி அவற்றின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளன.
மத்திய அரசாங்கத்தின் சமூக வலுவூட்டல் நலன்புரி அமைச்சின்கீழ் ஒரு நிறுவனமாக என்பிகோடா – வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புக்களின் ஒன்றியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கம்பெனி என்ற முறையிலும் மத்திய அரசில் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவைதவிர, ஐந்து மாவட்டங்களிலுமுள்ள அரசாங்க அதிபர்களும் வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புக்களின் ஒன்றியத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான ஒத்துழைப்பை வழங்கிவருகின்றனர்.
யுத்தத்திற்குப் பின்னரான நிலையில் சமூகத்தில் நலிவுற்றவர்களாகத் திகழ்கின்ற மாற்றுத்தினனாளிகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகச் செயற்படுகின்றவர்களினதும், அவர்களுக்காக சேவையாற்றுகின்ற நிறுவனங்களினதும் பணிகள் வரவேற்புக்கும் போற்றுதலுக்கும் உரியன.
அதேவேளை, இந்த நிறுவனங்களை ஓரணியில் ஒன்றிணைத்து மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை சீராகவும், பொருத்தமான முறையிலும் பூர்த்தி செய்வதற்கென உருவாக்கப்பட்டுள்ள வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புக்களின் ஒன்றியம் பரந்துபட்ட நிலையில் தனது சேவைகளை முன்னெடுக்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
Spread the love