பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்கான திருத்தங்கள், பாராளுமன்ற வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டன.
பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கான மூன்று திருத்தங்கள் மீதான வாக்களிப்பு இன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற இருந்த போதும், 2 திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பு மட்டுமே இடம்பெற்றிருந்தது. 3 அவது திருத்தத்தை முன்வைத்த ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இறுதி நேரத்தில் தனது திருத்தத்தை மீளப் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் பெப்ரவரி 27 ஆம் திகதியளவில் திருத்தப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு அல்லது அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தொழிற்கட்சியால் முன்வைக்கப்பட்ட திருத்தம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறே வாக்கெடுப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மற்றைய திருத்தம் மார்ச் 29 ஆம் திகதி இடம்பெற வேண்டிய பிரெக்ஸிற்றை மூன்று மாதங்களுக்கு தாமதப்படுத்துவதற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த திருத்தமும் தோற்கடிக்கப்பட்டது.
இதேவேளை வர்த்தகங்கள் மீதான உடன்பாடற்ற பிரெக்ஸிற்றின் பாதிப்புகள் குறித்த பகுப்பாய்வை வெளியிடுவதற்கு அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்த திருத்தமே மீளப்பெறப்பட்டது.
இந்த திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பு இன்று லண்டன் நேரம் பிற்பகல் 5 மணிக்கு ஆரம்பமாகி ஒவ்வொரு திருத்தம் மீதான வாக்கெடுப்பும் 15 நிமிடங்கள் வரை நீடித்திருந்த நிலையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட திருத்தங்கள் இரன்டுமே தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.