இந்தியாவின் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் ஆளும் கட்சியான அனைத்திந்திய அண்ணா திரவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையில் இன்று ஒப்பந்தத்தில் கைச்சாட்டுள்ளன.
இந்தியாவின் பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக முதலிய கட்சிகள் கூட்டணி வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டிருந்தன.
முதல்கட்டமாக அதிமுக-பாமக இடையே இன்று காலை சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கூட்டணி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் ஜெயக்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்களும் பங்கு பற்றியிருந்தனர். பேச்சுவார்த்தையின் நிறைவில், பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதேவேளை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் இன்று மதியம் சென்னை வருகின்றார். அவர் அ.தி.மு.க. தலைவர்களை சந்தித்து கூட்டணி தொடர்பில் பேச்சு வார்த்தை நடாத்தவுள்ளார்.