குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தொடர்ச்சியாக கடற்படை முகாமுக்கு வெளியில் இருந்து போராட்டத்தில் ஈடுபடும் தம்மை இனம் தெரியாத நபர்களும், கடற்படையினரும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும், புகைப்படம் எடுப்பதாகவும் தெரிவித்து தமக்கு பாதுகாப்பு வழங்க கோரி சிலாவத்துறை மக்கள் இன்று வெள்ளிக்கிழமை (22) மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை மக்களுக்குரிய 36 ஏக்கர் காணிகளில் தற்போது கடற்படை தங்கள் முகாம்களை அமைத்துள்ளது .
சுமார் 218 க்கு மேற்பட்ட மக்களின் காணிகள் அவ்வாறு கடற்படை வசமாக காணப்படுவதனால் கடற்படைமுகாமினை வேறு இடத்திற்கு மாற்றி குறித்த காணியை உரிய மக்களுக்கு வழங்க கோரி கடந்த புதன் கிழமை தொடக்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தங்களுடைய போராட்டத்தின் போது இனம் தெரியாதவர்களும் கடற்படையினரும் தொடர்ந்து அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்வதாகவும் போராட்டத்தில் ஈடுபடும் அனைவரையும் புகைப்படம் எடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட சிலாவத்துறை மக்கள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினூடாக இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
அச்சுறுத்தும் விதமாக கடற்படை நடந்து கொள்வதால் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தறுமாறும் எவ்வாறான அச்சுறுத்தல் வந்தாலும் கடற்படை தங்கள் காணிகளை விட்டு வெளியோறும் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.