இந்தியாவில் உருவான திரைப்படங்களுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. புல்வாமாவில் அண்மையில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் மத்திய துணை ராணுவ படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்ததையடுத்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், இந்தியத் திரைப்படங்களையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பாகிஸ்தானில் ஒளிபரப்ப தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதுடன் இந்த வழக்கின் அடுத்த விசாரணை காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முகாமை இந்திய விமானப் படை குண்டுவீசி அழித்ததன் பின்னர் இந்தியத் திரைப்படங்களை பாகிஸ்தானிய திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் புறக்கணிக்கப்போவதாக அந்நாட்டு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் சவுதரி பவாத் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
மேலும், இந்தியாவில் உருவான தயாரிப்புகளுக்கான விளம்பரங்களைப் புறக்கணிக்கவும் பாகிஸ்தானின் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையகத்துக்கு அவர் அறிவுறுத்தியிருந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றமே தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.