நடப்பாண்டுக்கான இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மக்களின் நலன்சார்ந்ததாக இல்லை என்பதனால் அதனை வன்மையாக எதிர்ப்பதாக தெரிவித்துள்ள ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினரான பிமல் ரத்நாயக்க, , ஜே.வி.பி அதனை எதிர்த்து வாக்களிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வரவு-செலவுத் திட்டத்தில் மக்கள் நலன்சார்ந்த விடயங்கள் உள்ளடக்கப்படாமல் ஆங்காங்கே போலியாக ஒரு சில வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். நுண்கடன் வசதிகளைப் பெற்று மீளச் செலுத்த முடியாமல், 2018ஆம் ஆண்டில் வடமாகாணத்தில் மாத்திரம் 69 பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனரென, புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனவெனத் தெரிவித்த அவர், அவ்வாறான கடன் திட்டத்தை இல்லாமல் செய்வதற்கான, ஒரு திட்டத்தை உருவாக்குவது தொடர்பில், ஒரு வார்த்தையேனும் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், வடக்கிலுள்ள தொழிற்சாலைகளை மீள உருவாக்குவதற்கான ஒரு திட்டமேனும் இந்த வரவு- செலவுத்திட்டத்தில் இலையெனத் தெரிவித்த அவர், வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், மக்களுக்கு திருப்பதியளிக்குமெனக் கூறி, திட்டத்துக்கு சார்பாக வாக்களிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.