நாட்டில் மூன்று தசாப்பதங்களாக போர் நடந்தபோது இல்லாத அக்கறை மனித உரிமை அமைப்புக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ள மக்கள் சுமுகமானதொரு வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு முயற்சிக்கின்ற போது தேவையின்றி மனித உரிமை அமைப்புக்கள் ஏன் தலையீடு செய்கின்றன என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இது இனங்களுக்கிடையில் முறுகல் நிலையைத் தோற்றுவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடு என்றே கருதவேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே அரசாங்கத்திற்கு முதுகெலும்பு உண்டெனின் ஸ்திரமான தீர்மானமொன்றை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள்சபை மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து விலக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.