Home இலங்கை கொக்கிளாய் முகத்துவாரத்திலுள்ள தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை மாற்று இனத்தவருக்கு பறித்துக் கொடுக்காதீர்

கொக்கிளாய் முகத்துவாரத்திலுள்ள தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை மாற்று இனத்தவருக்கு பறித்துக் கொடுக்காதீர்

by admin
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு – கொக்கிளாய் முகத்துவாரப்பகுதியிலுள்ள காணிகள் அனைத்தும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக தனியார் காணிகள் எனவும், அக்காணிகளைப் பறித்து மாற்று இனத்தவர்களுக்கு வழங்கவேண்டாம் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் தெரிவித்துள்ளார். 

கடந்த 11.05.2019அன்று, கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் அத்துமீறி குடியேறி இருக்கின்ற நீர்கொழும்பு பகுதி  சிங்கள மக்கள், அவர்களுக்கான வீட்டுத் திட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்வை செய்ய இருந்ததாகவும்,

அந்த நிகழ்வை முல்லைத்தீவு மாவட்ட செயலகம், கரைதுறைப்பற்று  பிரதேச செயலகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களும் இணைந்து தடுத்து நிறுத்தியிருந்ததாக, குற்றம் சுமத்தி அத்துமீறி குடியிருக்கின்ற சிங்கள மக்கள் அன்றைய நாளே கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக தாம் அத்து மீறிக் குடியிருக்கின்ற தமிழர்களுடைய பூர்வீக காணிகள், தங்களுடைய காணிகள் என்று கூறி, தமக்கு வீடுகட்டுவதற்கு அனுமதிக்குமாறு கடந்த 13.05.2019முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாகவும் கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் கடந்த 13.05.2019 அன்றைய தினமே குறித்த கொக்கிளாய், முகத்துவார பகுதியில் உள்ள மக்களின் வாழ்விடங்களை பார்வையிட்டு, அப் பகுதியில் உள்ள காணிகளை அடையாளப்படுத்தி, அவ்விடத்தில் அமைந்துள்ள பாடசாலையுடனான சுமார் 3 ஏக்கர் காணியை அரசாகாணி என்ற அடிப்படையில், ஒருவருக்கு தலா 6 பேச் காணியில் 62 வீடுகள் அமைக்க, அத்து மீறி குடியிருக்கும் சிங்கள மக்களது சம்மதத்துடன் அனுமதி அளித்தார்.

இந் நிலையில் இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய ரவிகரன் அவர்கள், அதில் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,


கொக்கிளாய் முகத்துவாரம் என்பது தமிழர்களுடைய பூர்வீக நிலங்களாகும். முகத்துவாரப் பகுதியை அண்டிய இடங்கள் முழுவதும் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களாகும்.

அந்த பூர்வீக நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக, பல தமிழர்கள் அங்கே இருக்கின்றார்கள். ஏற்கனவேயும் இவ்விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.

குறிப்பாக கலிஸ்ரப்பிள்ளை -ஜசிந்தா, செபமாலை – செபஸ்தியாம்பிள்ளை, சந்தியாப்பிள்ளை – சீமாப்பிள்ளை, செபஸ்தியாம்பிள்ளை – மரியமதலேனம், சிந்தாத்துரை – தம்பி ஐயா, சிங்கராசா – மனுவேல்பிள்ளை, உள்ளிட்ட பலர் அந்தக்காணிகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கின்றார்கள்.

கடந்த 1984ஆம் ஆண்டு அரசாங்கத்தினுடைய, அதாவது இராணுவத்தினுடைய திடீர் அறிவித்தலின் பேரில் அங்குள்ள எமது தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டிருந்தார்கள்.

அவ்வாறு உடனடியாக வெளியேற்றப்பட்டிருந்ததற்குப் பின்பு அத்துமிறிக் குடியேற்றப்பட்ட, சிங்களமக்கள் இராணுவத்தினுடைய பாதுகாப்போடு முகத்துவாரம் பகுதியில் இருந்ததென்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை.

இப்படியான நிலையில் சிங்கள மக்கள் ஏற்கனவே வந்து அங்கு தனியாக குடியேறியிருந்தனர் என்ற கருத்து எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

அதேவேளை இது தமிழ் மக்களுடைய காணி உதாரணமாக கொக்குளாய் பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரை விடயத்தில்கூட எல்லோருக்கும் தெரியும், மூன்று பேருக்குச் சொந்தமான காணியும், பிரதேசசபைக்குரிய காணிம் அதில் இருந்துகூட ஒரே ஒருவர்தான் அதுதொடர்பில் வளக்குத் தொடர்வதற்கும், தன்னுடைய காணி தனக்குத் தேவை என்றும் முன்வந்தார்.

ஏன் எனில் ஏனையவர்கள் பயத்தின் காரணமாக, இன்றைய நிலைமையில் தாம் போய் இவற்றை கேட்டால் தமக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தின் காரணமாகத்தான் அந்த விகாரையினுடைய காணி உரிமையாளர்களில், ஏனையவர்கள் வாதாடவில்லை.

அதேபோல்தான் இவர்கள்கூட என்னிடம் நேரடியாக ஆரம்பகாலகட்டத்தில் வருகைதந்து தங்களுடைய காணிகள் என்ற முறைப்பாட்டை விண்ணப்பித்ததன் பயனாக பலதடவைகள் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில், கொக்கிளாய் முகத்துவாரக்காணி தமிழ் மக்களுக்குரியது. அதேவேளை உறுதிக்காணி அதாவது தனியார் காணி என்ற தகவல்களை, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களிலும், மாகாணசபையிலுமாக பல தடவைகள் இதுபற்றிக் கதைத்திருக்கின்றேன்.

எல்லோரும் இருந்தபோது கூட, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டசெயலர், பிரதேசசெயலர்கள் எல்லோரும் இருந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில், அந்தக் காணிகள் , தனியார் காணி என்னும் கருத்து, அப்போதைய பிரதேசச்செயலாளர்களால் சொல்லப்பட்டதும் உண்மை.


ஆனால் இன்று அங்கு மூன்று ஏக்கர் காணி அரச காணி இருப்பதாக ஒரு அறிவித்தலைச் செய்து, அந்த மூன்று ஏக்கர் காணியில், அங்கு குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வழங்குவதாக செய்தி அறிக்கைகளைப் பார்க்கக்கூடியதாகவுள்ளது.

ஒரு தனியார் காணி சுற்றாடலில் எப்படி 03ஏக்கர் காணி மாத்திரம் அரசகாணியாக வரமுடியும் என்ற கேள்வியை நான் இங்கே கேட்க விரும்புகின்றேன்.

அந்த சுற்றாடல் முழுவதுமாக தனியார் காணி என்பதுதான் உண்மை. நாங்கள் முல்லைத்தீவு, முல்லைத்தீவே எமது பூர்வீகம். 

முல்லைத்தீவிலே இந்தக் கொக்கிளாய் காணி மாத்திரமல்ல, இந்த காணிகளில் பெரும்பாலான காணி விடயங்கள் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

அந்த வகையில் தமிழ் மக்களுடைய பூர்வீகக்காணி, இந்தப் பூர்வீகக்காணியில் தனியார் காணியாக இருந்த அந்த வளாகத்தில், தனியே ஒரு 03ஏக்கர் காணியை, அதாவது உரிமை கோராமல் இருந்தவர்களுடைய அந்த காணியை, இப்போது எடுத்து வைத்துக்கொண்டு அந்தக் காணியை அரச காணி என்று சொல்லிக்கொண்டு, எங்களுடைய மக்களின் காணிகளை அபகரிக்கும் ஒரு வஞ்சகத் திட்டத்தினை அரச அதிகாரிகள் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.


சரி அப்படித்தான் என்றால், ஏற்கனவே உள்ள காணிகள் அல்லது உரிமைகோராதவர்களுடைய விடயம் எனில், புதுக்குடியிருப்புப் பகுதியில் வள்ளிபுனம், தேவிபுரம் பகுதிகளில் கிட்டத்தட்ட 280இற்கும் மேற்பட்ட குடும்பங்கள், பல ஆண்டு காலமாக 30தொடக்கம் 40ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாகக் குடியிருக்கும் குடும்பங்களுக்குக்கூட மத்திய வகுப்புக் காணி எனச் சொல்லிக்கொண்டு இன்றுவரை அவர்களுக்கான வீட்டுத்திட்டமும் இல்லை, அந்த குடும்பங்களுக்கான காணி வழங்கலும் இல்லை, அது மத்திய வகுப்புக்காணி அது ஏற்கனவே வழங்கப்பட்ட காணி என்ற ஒரு கருத்தைச்சொல்லி இந்த மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், இங்கு மட்டும் சிங்கள மக்கள் வந்தவுடன் சிங்களமக்களுக்கு அந்தக் காணிகளை வழங்கவேண்டுமென்ற துடிப்போடு, அல்லது ஊக்கத்தோடு அதிகாரிகள் சிலர் செயற்படுவதை நான் வன்மையாகக்கண்டிக்கின்றேன்.

நிச்சயமாக இதற்கான பதில் என்றோ ஓர் நாள் இவர்கள் சொல்லவேண்டிவரும் என்பதை, மக்களின் பிரதி நிதி என்ற வகையில் இங்கே தெரிவித்துக்கொள்கின்றேன்.

முகத்துவாரத்தில் உள்ள காணிகள் அனைத்தும் தனியார் காணிகள், அவை தனியார்களுக்குச் சொந்தமானவை இன்று மக்கள் பயந்த சூழ்நிலையில்தான் அனைவரும் அதை உரிமைகோர வரவில்லையே தவிர, இந்த காணிகளுக்கு உரிமையாளர்கள் உரிமைகோர வரும்போது அன்று அவர்களுக்கு என்ன பதிலைச் சொல்லப்போகிறீர்கள்.

இந்த வகையில் ஏமாற்று வேலைகள் அல்லது தமிழ் மக்களுடைய காணிகளை பறித்து ஏனைய இன மக்களுக்கு வழங்கும் இந்த நடவடிக்கைகளை நிறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

#கொக்கிளாய்   #தமிழ்மக்களுடைய   #பூர்வீககாணி #kokilai #mullaitheevu

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More