2012ம் ஆண்டு நுவரெலியா வைத்தியசாலையின் புதிய கட்டிட தொகுதியை கட்டுவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் அம்பாந்தோட்டை வைத்தியசாலையையும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் நான்கு வருட இழுத்தடிப்பின் பின்னர் இந்த வைத்தியசாலையை கட்டி முடிக்க முடிந்துள்ளது என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட ஒரு தொகுதி கட்டிடம் மக்கள் பாவனைக்கு இன்று (15.07.2019 ) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நுவரெலியாவில் சுற்றுலாத்துறை அபிவிருத்தியையும் சுகாதாரத்துறை அபிவிருத்தியையும் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க அடுத்து வரும் ஒன்றரை மாதங்களில் கேபிள் கார் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். நுவரெலியா பல இனக்கலவரங்களை சந்தித்த நகரமாகும்.
ஆனால் மூவின மக்களும் இங்கு தற்போது ஒற்றுமையாக வாழ்கின்றனர். சிறுபான்மை மக்களினது அபிலாஷைகளையும் நாம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறான பயணத்தின் மூலமே முன்நோக்கி செல்லலாம்.
இந்த வைத்தியசாலையில் பல குறைபாடுகள் உள்ளன. எனவே இந்த குறைபாடுகளை உரியமுறையில் நிவர்த்தி செய்து தருமாறு சுகாதார அமைச்சரை கேட்டுக்கொள்கின்றேன். மேலும் இங்கு உள்ள வேலைவாய்ப்புகளை இதே பகுதி இளைஞர், யுவதிகளுக்கு வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார். #சிறுபான்மை #அபிலாஷைகளை #நிறைவேற்ற #சுற்றுலா #நவீன்
(க.கிஷாந்தன்)