இலங்கையுடனான உத்தேச மில்லேனியம் சலஞ் ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
குறிப்பிட்ட உடன்படிக்கைக்கான அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்காக உடனடியாக தலையிடுமாறு அவர் இலங்கை ஜனாதிபதியை கோரியுள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கையில் காணப்பபடும் சில விடயங்கள் குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி உடன்படிக்கையை ஏற்க மறுத்துள்ள நிலையிலேயே தூதுவர் இந்த அவசர கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.
குறிப்பிட்ட உடன்படிக்கையில் காணப்படும் சில சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் இந்த உடன்படிக்கை வெளிப்படையானது இலங்கை மக்களிற்கு ஜனாதிபதி வழங்கமுயலும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடியது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடன் அமெரிக்கா வெளிப்படையான இணைப்பினை பேணவிரும்புகின்றது என தெரிவித்துள்ளதோடு, குறிப்பிட்ட உடன்படிக்கை மூலம் 480 மில்லியன் டொலர்களை அமெரிக்க மக்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்குகின்றனர் எனவும், கடனாக வழங்கவில்லை எனவும் அலைனா டெப்பிளிட்ஸ் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.