மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா கடந்த 6 ஆம் திகதி மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி உள்ளது. தொடர்ந்து நவ நாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படுகின்றது. நேற்று செவ்வாய்க்கிழமை(13) மாலை இடம் பெற்ற நவ நாள் திருப்பலியை தொடர்ந்து நேற்று இரவு மடு திருத்தலத்தில் மெழுகு திரி பவணி இடம் பெற்றது. -குறித்த பவணியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, குருக்கள், அருட்சகோதரிகள், பல ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இன்று புதன் கிழமை(14) மாலை வேஸ்பர் ஆராதனையும், நாளை வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.
இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான அதி வணக்கத்திற்குறிய வின்சன் பெனாண்டோ ஆண்டகை ; பங்கேற்க மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகையின் தலைமையில் நூற்றுக்கணக்கான குருக்கள் இணைந்து மடு அன்னையின் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்க இருக்கின்றார்கள். அதனைத்தொடர்ந்து திருச் சுரூப பவணியும்,ஆசிரும் இடம் பெறும்.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்பு குறித்து பல்வேறு ஐயப்பாடுகள் காணப்படுகின்ற போதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தந்துள்ளனர்.
காவல்துறை ,இராணுவம்,கடற்படை விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு,பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல விதமான தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #மடு #மெழுகுதிரி #பவணி #ஆராதனை
லம்பேர்ட்