இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து தமிழக அரசின் நிலைபாடு என்ன என கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர்h.
குடியுரிமை சட்டத்தை பொறுத்தவரைக்கும், இந்தியாவில் வாழ்கின்ற இந்தியர்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. அது எந்த மதத்தினராக இருந்தாலும் சரி. எவருக்கும் பாதிப்பு இல்லை என பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தெளிவான கருத்தை தெரிவித்து இருக்கின்றார்கள்.
இதில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்காளதேஷ் ஆகிய நாடுகளில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள், பாசிகர்கள், பவுத்தர்கள் போன்ற சிறுபான்மையினர் மத பிரச்சனையின் காரணமாக அந்த நாடுகளில் இருந்து பாதுகாப்பு கருதி இந்தியாவிற்கு வரும் நிலை ஏற்படுகின்றது. அவ்வாறு வரும் அவர்கள் இந்தியாவில் தொடர்ந்து அவர்கள் 5 ஆண்டுகள் வசித்து வருவோர்களானால் அவர்களுக்கு மத்திய அரசினுடைய சில நிபந்தனைகளின் அடிப்படையில் இந்திய குடியுரிமை அளிக்க வகை செய்யும் திருத்த சட்டம் என தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். இதில் எந்த இந்தியர்களும் பாதிக்கப்படுவதாக இல்லை.
2-வது, தமிழகத்தில் வாழ்கின்ற இலங்கை தமிழ் மக்களை பொறுத்தவரைக்கும், ஏற்கனவே, அம்மா (ஜெயலலிதா) இருந்த காலக்கட்டத்தில் 2016-ம் ஆண்டு, சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிந்த பிறகு பிரதமரை சந்தித்த போது, அம்மா அவர்கள் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என அப்போதே கோரிக்கை வைத்தார்கள்.
அம்மா மறைவிற்கு பிறகு, நான் பிரதமரை சந்தித்தபோதும், அம்மா வலியுறுத்திய அந்த கோரிக்கையை பிரதமரிடத்திலேயே வலியுறுத்தி இருக்கின்றேன். கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டு இருக்கின்றது.
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ள இலங்கை மக்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கின்றது. அதோடு, குடியுரிமை திருத்த சட்டம் இப்போது பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியபோது, அ.தி.மு.க. சார்பாக பேசப்பட்ட மேலவை உறுப்பினர்கள் இதை தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள். இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ள இலங்கை வாழ் மக்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று அவர்கள் பேசியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். #இலங்கைதமிழர்களுக்கு #இரட்டைகுடியுரிமை #குடியுரிமைசட்டதிருத்தமசோதா