நாரஹேன்பிட லங்கா வைத்திய சாலையில் இன்று (26.12.19) மாலை அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன வைத்திய பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பின்னர் வாக்குமூலம் பெறப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சர்ச்சைக்குரிய வௌ்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 24 ஆம் திகதி பிடியாணை ஒன்றை பிறப்பித்தது.
அதன்படி, விசேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ராஜித்த சேனாரத்னவின் இல்லத்தில் நேற்று (25.12.19) மற்றும் இன்று (26.12.19) சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இன்று பிற்பகல் 04.00 மணியளவில் கொழும்பு – 07, ஜாவத்த வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு அதிகாரிகள் சென்று சுமார் 40 நிமிடங்கள் ராஜித்த சேனாரத்னவின் வீட்டை சோதனையிட்ட பின் அங்கிருந்து வௌியேறியிருந்தனர். இந்நிலையிலேயே ராஜித்த சேனாரத்ன நாரஹேன்பிட லங்கா தனியார் வைத்தியசாலையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.