கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் இதுவரை 133 பேர் நாடு முழுவதுமுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 45 பேர் அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீர்கொழும்பு வைத்தியசாலையில் 15 பேர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் 14 பேர் கம்பஹா வைத்தியசாலையில் 13 பேர் பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுவர் ரிட்ஜ்வே சீமாட்டி வைத்தியசாலையிலும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 4 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், நாட்டில் இதுவரை 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 28 பேரின் மாதிரிகள் நேற்றைய தினம் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொரளை மருத்துவ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியொன்றை அரசாங்க தகவல் திணைக்களம் இன்று முற்பகல் ஏற்பாடு செய்திருந்தது.
இதில் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
கண்காணிப்பு நடவடிக்கைகைள ஆரம்பிப்பதற்கு முன்னர் இத்தாலியிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்கள் ஊடாக தொற்று பரவுவதற்கான சாத்தியமுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதன்போது தெரிவித்திருந்தார்.