குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் குற்றம் தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் இவ்வாறு அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு சக்திகள் மற்றும் பேரினவாத சக்திகளுக்கு துணை போகும் சிலரே கட்சியை இவ்வாறு காட்டிக் கொடுக்க முயற்சிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் போலி ஆவணங்களை தயாரித்து அதன் ஊடாக கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்து கட்சியை அழிக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
போலிக் குற்றச்சாட்டுக்களுக்கு கட்சியின் உறுப்பினர்கள் அங்கத்தினர்கள் ஏமாற மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சிறுபான்மை சமூகங்கள் இணைந்து செயற்படுவதன் மூலமே நிரந்தரமான அரசியல் தீர்வு கிட்டும் என்பதில் நம்பிக்கை கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.