எமது தலைமுறை வரம்பெற்று வந்துள்ளதா?
சாபங்களுடன் கூடவே பிறந்துள்ளதா?
பூமாலைகளும், முட்கிரீடங்களும்
வாய்க்கப்பெற்ற வாழ்க்கை நமக்குரியதாயிற்று.
உயிர்த்தும், மரித்தும்
மரித்தும், உயிர்த்தும்,
சொல்லக்கூடியதும் முடியாததுமான
ஆயிரமாயிரம் கதைகளுடன்,
வாய்க்கப்பெற்ற வாழ்க்கை நமக்குரியதாயிற்று.
உலகம் எங்களுக்கு மூடியிருந்ததொரு காலம்.
எங்களை உலகத்துக்கு மூடிக்கொண்டதொரு காலம்.
வாழ்வு ஒருபகுதிக்கு மறுக்கப்பட்டதொரு காலத்தில்,
வேறொரு பகுதி வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.
வாழ்வு மறுக்கப்பட்ட சமுகங்கள்,
உலகம் முழுவதும் எப்பொழுதும்
வாழ முனைந்து கொண்டும்,
உலகம் முழுதும் பரந்தும்
திரண்டும் கொண்டேயிருக்கும்.
அஞ்சி பரதேசம் போகமுடியாத ஒருகாலம்
அவரவர் பொந்துகளில் மனிதர்,
புறாக்கூடகளாயிற்று உலகம்.
பெருங்கேடு வந்துற்ற போதும்,
கொந்தளித்துக், கொந்தளித்து
பெருக்கெடுத்துக் கொண்டேதான்
இருக்கிறது,
கேடுகாரர்களின் அவா.
கேடுகள் விளைவித்தும்,
விளைந்த கேடுகளில்
வாய்ப்புகளை வடிவமைத்தும்
வாழும் கேடுகாரர்களின்
அடங்காத அவா,
வெட்கமல்ல வெட்கமல்ல வீரம்தான்.
சி.ஜெயசங்கர்.