Home இலங்கை கொரொனா பேரனர்த்தக் காலமும் கல்வியும்…

கொரொனா பேரனர்த்தக் காலமும் கல்வியும்…

by admin


கல்வி என்பது ஒரு மனிதரின் நடத்தை மாற்றத்திற்கான செயற்பாடாகக் கொள்ளப்படுகின்றது. ஒரு மனிதரிடம் ஆக்கபூர்வமான அறிவு, திறன், மனப்பாங்கு விருத்திகளை ஏற்படுத்துவதே கல்வியின் பிரதான நோக்கமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. பல்வேறு காலங்களிலும் வாழ்ந்து கல்வி தொடர்பாகச் சிந்தித்து கருத்துக்களை முன்வைத்துள்ள அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகவும் இதுவே இருக்கிறது.

மனித குல வரலாற்றில் அரசுகள் உருவாக்கம்பெற்ற காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் ஈறாக அரசின் அங்கீகாரம் பெற்ற (உத்தியோகபூர்வ) கல்வியின் நோக்கமும் அந்த அரசுகளை இயக்கும் அதிகார வர்க்கத்திற்குச் சாதகமான நடத்தைகளைக் கொண்ட மனிதர்களை வடிவமைப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றதனை கல்வி பற்றிய ஆராய்ச்சிகள் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளன.

இவ்விதம் அரசின் அங்கீகாரமுடைய கல்வி அரசாங்கத்தினைக் கைப்பற்றும் அதிகார வர்க்கங்களின் நலன்களுக்கு வலுச்சேர்ப்பதாக இருக்க, இதற்கு மாற்றாக சாதாரண மனிதர்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்வதற்கான நடத்தைகளைக் கற்றுக் கொள்கின்ற பாரம்பரியமான தொழில் முறைகளுடன் இணைந்த கல்விப் போக்குகளும் உலகில் நடைமுறையில் இருந்து வருகின்றன. இத்தகைய கல்வி முறைமைகள் அதிகார பீடங்களால் உத்தியோகபூர்வமான கல்வியாக ஒரு போதும் அங்கீகரிக்கப்படவேயில்லை, மாறாக இத்தகைய அறிவும், திறனும் உள்ள மனிதர்கள் மிகப்பெரும்பாலும் படிப்பறிவற்ற சாதாரண சனங்களாகவே கொள்ளப்பட்டனர். பின்னாட்களில் பொது மக்கள் தாம் இயற்கையுடன் இணைந்து வாழ்வாங்கு வாழ்வதற்காகக் காலங்காலமாகக் கற்று வரும்இந்த நடைமுறைகளை நவீன கல்வியியலாளர்கள் முறையில் கல்வி என்று அடையாளப்படுத்தி உத்தியோகபூர்வமான கல்வியிலிருந்து முறையற்றது எனப்புறமொதுக்கியே வைத்துள்ளனர்.

உலக வரலாற்றில் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் காலனித்துவ ஆட்சி கல்வியைப் பொதுமைப்படுத்தியதுடன் கல்வி என்பதை மேற்குலக காலனித்துவத்திற்குச் சார்பானதாக வடிவமைத்துள்ளது. முழுக்க முழுக்க மேற்குலகின் காலனித்துவ ஆட்சியை வலுப்படுத்துவதற்கான அறிவையும், திறனையும், மனப்பாங்கையும் கொண்ட மனிதர்களை உலகமெங்கும் உருவாக்குவதற்கேற்ற கல்விக் கொள்கையே காலனித்துவ ஆட்சியாளர்களால் வடிவமைக்கப்பட்டு பிரயோகிக்கப்பட்டு வந்துள்ளது. காலனித்துவ ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட நாடுகளிலும், தேசங்களிலும் கல்வி என்பதே காலனித்துவம் அறிமுகப்படுத்தியதாகவே (வெள்ளைக்காரர் தந்த கொடையாகக் கருதுதல்) மிகப்பெரும்பாலும் பொதுப்புத்தியில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது.

காலனித்துவத்திற்கு எதிராகப் போராடிய உலகின் பல்வேறு நாடுகளினதும் தேசங்களினதும் காலனீய நீக்கச் செயற்பாட்டாளர்கள் காலனித்துவத்தின் நீண்டகால ஆக்கிரமிப்பிற்கு எவ்வாறு காலனித்துவ ஆட்சியின் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட காலனித்துவ நலன்பேணும் கல்விக் கொள்கைகள் காரணமாக இருந்து வருகின்றன என்பதை எடுத்துக் காட்டியுள்ளனர்.

இத்துடன் காலனித்துவத்திலிருந்து முற்றாக விடுதலை பெறுவதற்கு காலனீய நீக்கமுள்ள கல்வி முறைமைகளை வடிவமைக்க வேண்டியது மிக மிக அவசியம் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். பிறேசில் நாட்டினைச் சேர்ந்த ஃபாலோ பிறயறி என்கின்ற காலனீய நீக்க கல்விச் சிந்தனையாளரால் முன்மொழியப்பட்டுள்ள ‘விமர்சன விழிப்புணர்விற்கான கல்வி’ காலனீய மனப்பாங்கிலிருந்து விடுதலைபெற்று ஒவ்வொரு மனிதக் குழுமங்களும் தங்களுக்கான கல்வியைத் தாங்களே தீர்மானிக்க வேண்டும் என்பதற்கான ஒரு முன்னுதாரணமாக உள்ளது.

இத்தகைய உலகளாவிய கல்விப் போக்குகளின் புரிந்து கொள்ளலின் பின்புலத்தில் உலகம் முழுவதும் காலனித்துவ நலன் பேணும் நவீன கல்விக்கு மாற்றான காலனீய நீக்கம் பெற்ற சமாந்தரக் கல்வி முறைமைகள் பற்றிய அக்கறைகளும் உரையாடல்களும் செயற்பாடுகளும் நிகழ்ந்து வருகின்றன.உலகில் வாழும் பல்வேறு மனிதக் குழுமங்களும் இயற்கையுடன் இணைந்து வாழ்வாங்கு வாழ்வதற்குரிய,சமநிலையான ஆளுமை மற்றும் நடத்தைகளையுடைய மனிதர்களை உருவாக்குவதற்காககாலங்காலமாகத் தொடர்ச்சியான பிரயோகங்களூடாகக் கண்டறிந்து கட்டமைத்த சடங்குகள், கலைகள், விளையாட்டுக்கள்முதலியவற்றிலுள்ள கல்வி முறையியல்களை அடையாளங்கண்டு, அவற்றிலுள்ள பொருத்தமற்ற விடயங்களை விட்டொதுக்கி, தேவையானவற்றைச் சேர்த்தெடுத்து இன்றைய காலத்தின் தேவைகளுக்கேற்ப மீளுருவாக்கம் செய்யும் முயற்சிகளில் காலனீய நீக்கத்துடன் மாற்றுக்கல்வி முறைமைகளை வடிவமைக்க முனையும் ஆய்வறிவாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இப்பின்புலத்திலேயே தற்போது உலக நடைமுறையில் பெருந்தாக்கஞ் செலுத்தி வரும் கொரொனா பேரனர்த்தக் காலத்தில் முன்னெடுக்கப்படக் கூடியகல்வி தொடர்பாக சிந்திக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

கொரொனாப் பேரனர்த்தம் பொதுமைப்படுத்தப்பட்ட இராட்சத வணிக நிறுவனங்களின் பிடிக்குள் இருக்கும் நுகர்வுப் பொருளாதாரப் பண்பாட்டிலிருந்து விடுபட்டு வித்தியாசம் வித்தியாசமான பல்வகைத்தன்மை மிக்கநுண்ணளவிலான சுயசார்புத்தன்மை கொண்டஉள்ளூர்ப் பொருளாதாரப் பண்பாடுகளை நோக்கி உலகம் செல்ல வேண்டியதன் அவசியத்தை எடுத்துணர்த்தி நிற்கின்றது.

கல்விக்கும் பொருளாதாரத்திற்கும் மிக நெருக்கமான உறவு உண்டு,கல்வி என்பது மிகப்பெரும்பாலும் பொருளாதாரப் பண்பாட்டிற்குரிய நடத்தைகளைக் கொண்ட மனிதர்களை வடிவமைப்பதாகவே இருந்து வருகிறது.

காலனித்துவத்தினூடாக அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி முறைமையில் நுகர்வுப் பண்பாட்டிற்குரிய நடத்தைகளை வலுப்படுத்துதல் பிரதான நோக்கமாக இருந்து வருகின்றது. சுயசார்பான பொருளியல் பண்பாட்டின் வேர்களை அறுத்துக் கொண்டு சேவைத்தொழிற் துறைகளை அடிப்படையாகக் கொண்ட நவீன நுகர்வுப் பண்பாட்டிற்குள் ஒவ்வொரு மனிதரும் உள் நுழைவதற்கான வாயிலாகவே நவீன கல்வி இயக்கம்பெற்று வருகின்றது. இப்பண்பை காலனீய நீக்கச் செயற்பாட்டாளர்கள் உள்ளூர் மக்களை காலனித்துவம் உறுப்பிய நீக்கம் பெறச் செய்யும் நடவடிக்கை என எடுத்துக் காட்டியுள்ளார்கள். அதாவது காலனித்துவம் தான் அடிமைப்படுத்தும் மனிதக்குழுமங்களை நீண்ட காலமாக அடிமை நிலையினுள் வைத்திருப்பதற்காக காலனிய நலன்சார் கல்வி முறைமையூடாக அம்மக்களை அவர்களின் நிலத்திலிருந்தும், பண்பாட்டு வேர்களிலிருந்தும் அந்நியப்படுத்தி காலனிய நலன்களுக்குரிய மனப்பாங்குகளைப் பெற்று வாழக்கூடியவாறு உறுப்பிய நீக்கஞ் செய்வதையே இலக்காகக் கொண்டு இயக்கம்பெற்று வருகின்றது என்கின்றனர்.

இன்றைய கல்வி தேர்ச்சி மையம் என்று கூறப்பட்டாலும் எதார்த்தத்தில் அது பரீட்சை மையமானதாகவே இருந்து வருகின்றது. மிகப்பெரும்பாலும் வாழ்க்கைக்கு பயன்வழங்க முடியாத சூத்திரங்களில் பயிற்சி பெற்று வெற்றிக் கம்பத்தை அடைவதற்கே மிகப்பெரும்பாலான மாணவர்கள் வழிப்படுத்தப்படுகின்றனர். சிந்தித்தல், ஆராய்தல், கண்டறிதல், புத்தாக்கஞ்செய்தல் என்பவற்றிற்கு வழிப்படுத்துவதிலிருந்து பெரும்பாலும் விலகி மாணவர்களை பரீட்சைக்குரிய வகையில் திசைமுகப்படுத்துவதே சிறந்தஆசிரியத்துவமாகத் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. பரீட்சைக்கு உரியவாறான உத்திகளைப் போதிப்பவரே சிறந்த ஆசிரியராக மதிப்பிடப்படுகின்ற நிலைமை மிகவும் வலுவாக இருந்து வருகின்றது.

கற்கும் காலங்களில் ஒவ்வொரு பிள்ளைகளையும் மிகப்பெரும்பாலும் தான் வாழும் சூழலுடன் தொடர்பு கொள்ள விடாமலும்,எழுத்தாற்றல் அதற்குத்தகுந்த கிரகித்தல், மனப்பாடஞ் செய்தல் எனுந் திறன்களை மாத்திரம் பிரதானப்படுத்தி மதிப்பீட்டு முறைமைகளை வடிவமைத்துள்ள இன்றைய உத்தியோகபூர்வ கல்வியானது. தான்வாழும் பண்பாடு சுற்றுச் சூழல் சார்ந்து சுயமாகச் சிந்தித்து சவால்களை எதிர்கொண்டு வாழும் அறிவு, திறன், மனப்பாங்குள்ள மனிதர்களைச் சிருட்டிப்பதென்பது மிகவும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது.

இன்றைய கல்வி போட்டி மனப்பாங்கை விருத்தி செய்வதுடன் வரையறுக்கப்பட்ட ஒரு சில பொது மதிப்பீட்டு நியதிகளுக்கூடாக போட்டியில் முன்னுக்கு வரும் சிலரைக் கொண்டாடுவதாகவும், அத்தகையோருக்கே கல்வியறிவு பெற்றோர் எனும் அங்கீகாரத்தையும், இதன் ஊடாக அதிகாரத்தையும் அந்தஸ்தையும் வழங்குகின்றது. போட்டியில் பின்னுக்கு வரும் வெகுபலரை அதாவது மாற்று மதிப்பீட்டு நியதிகள் இன்மையால் தத்தமது அறிவையும், திறனையும், மனப்பாங்கையும் வெளிப்படுத்த சிரமப்படும் கணிசமான மாணவர்களை புறமொதுக்குவதாகவும் காணப்படுகின்றது. பரீட்சை மையக் கல்வியின் ஓட்டப் போட்டியில் வௌ;வேறு ஆற்றல்களுடனும், திறன்களுடனும் பின்னுக்கு வரும் பலருக்கு எதிர்காலம் பற்றிய கேள்விக் குறிகளே பரிசாக வழங்கப்படுகின்றது. இத்தகைய சவாலை எதிர்கொள்வதற்காகவே தேசிய தொழிற்பயிற்சி தகைமை (Nஏஞ)சான்றிதழ் கற்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் ஒரு சில திறன்களுக்குரிய வரையறைகளைக் கொண்டதாகவே இருக்கின்றது.

தமது பிள்ளைகள் கல்விப் போட்டியில் வெற்றி பெறுவதற்காக பல பெற்றார் நகரங்களிலுள்ள இடவசதிகள் குறைந்த பிரபல்யமான பாடசாலைகளை நோக்கிச் செல்லும் நிலைமை அதிகரித்துள்ளது. ஒரு வகுப்பறையில் ஏறக்குறைய நாற்பது பிள்ளைகள் எனும் அளவிற்கு நெருக்குவாரங்களுடன் ஆறு மணி நேரத்தைக் கழிக்க வேண்டிய பரிதாபத்துடன் பிள்ளைகள் வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். இன்றைய கொரொனா காலத்து சுகாதார நடைமுறைகளுடன் ஒத்து வராத வகையிலேயே பாடசாலைகளின் வகுப்பறைகளும் மாணவர்களின் எண்ணிக்கையும் காணப்பட்டு வருகின்றமை கவனத்திற்குரியது.

மேலும் நமது பாடசாலைக் கல்வி முறைமையில் பிள்ளைகளிடம் சிறு பராயத்திலிருந்தே பிரிவினைச் சிந்தனைகள் வேர்கொள்ளும் நிலை வலுவாகக் காணப்படுகின்றது. அதாவது இனத்தை, மதத்தை, பால்வேற்றுமையை, வர்க்க வேற்றுமையினை மேலும் ஆழப்படுத்தும் வகையில் பாடசாலைகள் அடையாளங்களைக் காட்டி நிற்பதும், அவ்வடையாளங்களை மீளமீள வலுப்படுத்த எத்தனிப்பதும் மதிப்பீட்டிற்குட்படுத்தப்பட வேண்டியதாக இருக்கின்றது. இனவாதம், அடிப்படைவாதம் என்பவற்றிலிருந்து விடுதலைபெற்று தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்கு இத்தகைய தனித்த அடையாளங் காட்டும் பாடசாலை முறைமை எந்தளவு பொருத்தமானது என்பது குறித்து உரத்துச் சிந்திக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

இத்தோடு பாடசாலைக் கல்வி முறைமையில் காலத்திற்குக் காலம் கொண்டுவரப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் பெரும்பாலும் நவகாலனித்துவ நிகழ்ச்சி நிரலுடன் இணைந்த நடவடிக்கைகள் என்று விமர்சிக்கப்பட்டு வருகின்றன. அதாவது தேசிய கல்வித் திட்டத்தில் மறுசீரமைப்புக்களைக் கோரும் உள்நாட்டு ஆய்வறிவாளர்களின் கோரிக்கைகளைச் சாட்டாகவும் சந்தர்ப்பமாகவும் வைத்து நவகாலனித்துவ ஆக்கிரமிப்பின் முகவரமைப்புக்களான நிதிநிறுவனங்களின் அனுசரணையுடன் இத்தகைய மறுசீரமைப்புக்கள் நவகாலனித்துவத்தின் புதிய தேவைகளுக்கேற்ற நடத்தைகளையுடைய மனிதர்களின் உருவாக்கத்திற்குரியவாறு மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாக ஆய்வறிவாளர்கள் விமர்சிக்கின்றனர். உதாரணமாக தொழிற்கல்விக்கான மறுசீரமைப்பில் உள்நாட்டின் வளங்களைக் கையாளும் தொழிற்துறைகளுக்குப் பதிலாக பெரும்பாலும் பல்தேசிய வணிக நிறுவனங்களின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அதற்குரிய திறனுள்ள வேலையாட்களை உருவாக்குவதற்கு ஏதுவாகவும் தொழிற்கற்கைகள் உருவாக்கப்பட்டுள்ளமையினைக் காணலாம்.

இவ்வாறு பாடசாலைக்கல்வி இருக்க உயர்கல்வியின் நிலையும் சிக்கலானதாகவே காணப்படுகின்றது. தொழில் வாண்மையுள்ள பட்டதாரிகளை உருவாக்குதல் என்பது உயர்கல்வியில் உபதேசிக்கப்பட்டாலும். எதார்த்தத்தில் எந்தவிதமான தொழில்சார் பிரயோகங்களிலும் ஈடுபட்டு அதற்கான தேர்ச்சிகளை அடைய முடியாத விதத்திலேயே உயர்கல்வியின் பொறி முறைகள் இயக்கம் பெற்று வருகின்றன. மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் பெரும்பாலும் எழுத்து மையப்பட்ட மதிப்பீட்டு முறைமைகளுக்குள் சிக்குண்டு அதற்குத் தகுந்த விதத்தில் தம்மை தகவமைத்து வெளியேறும் பட்டதாரிகளாகவே அதிகமானவர்கள் உயர்கல்வி நிலையங்களிலிருந்துவெளிவருகிறார்கள். தாம் கற்கின்ற துறைகள் சார்ந்து ஒரு சுயமான தொழில் முயற்சியாளராக பட்டதாரிகள் உருவாக முடியாத நிலைமையேபெரும்பாலும் உயர்கல்வி நிறுவனங்களில் வலுவாக இருந்து வருகிறது.

இவ்விதமாக நடைமுறையிலுள்ள உத்தியோகபூர்வ கல்வி முறைமை (பாடசாலைக் கல்வியும், உயர்கல்வியும்) பல்வேறு கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் பின்னணியில் கொரொனா பேரனர்த்தம் இக்கல்வி முறைமையில் மேலும் பல தாக்கங்களை உருவாக்கியுள்ளது. அதாவது கொரொனாவைத் தொடர்ந்து பரவலாக்கப்பட்டு வரும் இணையவழிக் கற்கை முறைமையானது நடைமுறையில் உள்ள கற்றல் செயற்பாட்டில் இருந்துவரும் குறைந்த பட்ச சுதந்திரத்தையும் இல்லாமலாக்கி முழுக்க முழுக்க இலத்திரனியல் தகவல் தொடர்பாடல் பொறிக்குள் அகப்பட்டு வாழக்கூடிய நிலைமைக்குள்எமது சந்ததிகளைக் கொண்டு சேர்ப்பதற்கே வழியமைக்கும் என ஆய்வறிவாளர்கள் அச்சந்தெரிவித்து வருகின்றார்கள். அதாவது நுகர்வுப் பண்பாட்டிற்குரிய மனப்பாங்கை விருத்தி செய்வதற்கும், சேவைத் தொழிற்துறைகளுக்கேற்ற அறிவையும் திறனையும் வலுப்படுத்துவதற்கும் இந்தப் பேரனர்த்தக் காலம் தகவல்தொடர்புசாதன நிறுவனங்களின் வணிக நலன்சார்ந்த கல்வியியலுக்கு மேலும் வாய்ப்பாக அமைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டு வருகின்றது.

அதேநேரம் இப்பேரனர்த்த முடக்கற்காலம் நவீன கல்வி முறைமைகளால் தாம்வாழும் சூழலிலிருந்து மெதுமெதுவாக அந்நியப்படுத்தப்பட்டு எதிர்கால சந்ததிகள் நுகர்வுப்பண்பாட்டிற்குள் தள்ளப்பட்டு வரும் அபாயத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு தமக்கேயான மாற்றுக்கல்வி முறைமைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு வசதிகளையும் வழங்கியுள்ளதாக ஆய்வறிவாளர்கள் கருதுகின்றனர். உதாரணமாக பெருமளவானோர் நகரங்களை நோக்கி கல்விக்காக நகரும் தன்மையினை மாற்றியமைக்க ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ எனும் சிந்தனையை மேலும் விரிவாக்கஞ் செய்து நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கும் நாட்டின் பல்வகை வித்தியாசமான பொருளியல் நிலைமைகளுக்கேற்ற விதத்தில் பிரதேச கல்விக் கோட்டங்கள் சுதந்திரமாகத் தீர்மானங்களை எடுப்பதனைச் சாத்தியப்படுத்துதல் பற்றி ஆராய்வதற்கும் உரிய வாய்ப்புக்களை இப்பேரனர்த்த காலம் வழங்கியுள்ளது எனலாம்.

கல்விக்கான நிருவாகப்பொறிமுறைமை முழு நாட்டிற்கும் மிகப்பெரும்பாலும் ஒரே தன்மையுடன் காணப்படுவதால் நாட்டின் பல்வகைப் பொருளாதாரப் பண்பாட்டினை விருத்தி செய்வதற்கான மனித வளத்தை உருவாக்குவதில் சவால்கள் எதிர்கொள்ளப்பட்டு வருகின்றன. உதாரணமாக கரையோரப்பகுதிகளில் கரைவலைப் பருவகாலங்களில் விடுமுறை பெற்று தொழில் திறனையும், அறிவையும், அதற்கான மனப்பாங்கையும் விருத்தி செய்ய வேண்டிய பிள்ளைகள் அக்காலங்களில் தாம் வாழும் சூழலிலிருந்து தன்னை விடுவித்து பரீட்சைக்காகவோ அல்லது பாடசாலையின் கருமங்களுக்காகவோ தம்மை ஈடுபடுத்த வேண்டிய வகையில் கல்வி ஆண்டிற்கான கால அட்டவணை பொதுமைப்படுத்தப்படுவதால்எதிர்காலத்தில் கரையோரங்களில் வாழும் கரையோர வளங்களைக் கையாளத் தெரியாத கல்விமான்களையே இக்கல்வி சிருட்டித்துத் தரும் என்று விமர்சிக்கப்படுகின்றது.இவ்வாறே ஒவ்வொரு பிரதேசத்தினதும் சூழல்சார் பொருளியல் பண்பாட்டுடன் ஊடாட முடியாத வகையில் இளந்தலைமுறையினரை பொதுமைப்படுத்தப்பட்ட கல்வி முறைமை தடுத்து வருகின்றது. சூழலிலுள்ள பொருளாதார வளங்களுடன் இடைவினை புரிவதைத் தடுக்கும் கல்வியின் காரணமாகவே வளங்கள் பற்றி வகுப்பெடுப்பதற்கு வெளிநாட்டு நிபுணர்களை அழைக்க வேண்டி வருவதாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவேற்கும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

எனவே! நாட்டின் கல்வி நிருவாகப் பொறிமுறை பிரதேசங்களின் பொருளியல் சிறப்புத்தன்மைக்கேற்ற விதத்தில் நெகிழ்ச்சியுடன் முன்னெடுக்கப்படுவதற்கான மாற்றுத் திட்டங்கள்,மாற்றுப் பொறிமுறைமைகள் உருவாக்கப்படுவது அவசியமாகும். முழு நாட்டிற்கும் கலைத்திட்டம் பொதுவாக இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்தும் கால அட்டவணையில் வித்தியாசங்களும் நெகிழ்வும் கடைப்பிடிக்கப்படல் மிகவும் தேவையாக உணரப்படுகின்றது. நிருவாக சேவையின் கட்டமைப்பில் கச்சேரி முறைமையிலிருந்து பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டதைப் போல,கல்வி நிருவாகத்தில் மாவட்டக்கல்வித் திணைக்களத்திலிருந்து வலயக்கல்வித் திணைக்களங்கள் பரிணமித்ததனைப் போன்று இன்னும் நுண்ணளவில் பிரதேசத்தின் சமூக பொருளாதார பண்பாட்டிற்கேற்ற விதத்தில் பொதுக்கல்வியை திட்டமிட்டு முன்னெடுக்கக் கூடிய வகையிலான அதிகாரமும் சுதந்திரமும் கொண்ட கல்வி நிருவாகப் பொறிமுறைமை பரிணமிக்க வேண்டிய தேவை இன்று உணரப்படுகின்றது. ஒரு பிள்ளை பாடசாலையில் கற்கும் அதேகாலத்தில் தான் வாழும் சூழல் சார்ந்தும் சூழலின் பொருளாதார பொறிமுறைமையின் இயக்கஞ் சார்ந்தும் செயல்முறையில் கற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். இத்தகைய நிலைமை கடைப்பிடிக்கப்படுமாக இருந்தால் வேலையற்ற பட்டதாரிகளை நாம் காண்பது அரிதாகவே இருக்கும்.
இத்தோடு ஆளாள் இடைவெளிகளுடன் பிள்ளைகள் கற்பதற்கான சூழலை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை கொரொனா அனர்த்தம் ஏற்படுத்தியுள்ளதால். அருகிலுள்ள பாடசாலைகளிலேயே கற்பதற்கான ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டியது எதார்த்தமாகின்றது. இந்த இடத்திலேயே ‘ஆயிரம் பாடசாலை’,’அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ எனும் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தி வினைத்திறனுடன் முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது.

கொரொனா முடக்கல்; பெரும்பாலான பிள்ளைகள் தாம் வாழும் சூழலை விளங்கிக் கொள்வதற்கான வாய்ப்புக்களை வழங்கியது. வீட்டின் வளங்கள் குறித்தும் அவற்றின் பிரயோகங்கள் பற்றியும் செயல் முறையில் சிந்தித்து இயங்குவதற்கான நிலைமைகளை உருவாக்கியுள்ளது. வீட்டுத் தோட்டம் செய்தல், உள்ளூர் மருத்துவ முறைகளை அறிந்து கொள்ளுதல்,பாரம்பரியமான விளையாட்டுக்களை அறிந்து பயிலுதல் என பலவேறு சாதகமான விடயங்கள் நடந்தேற வாய்ப்புக்கள் கிடைத்தன. சுருங்கச் சொன்னால் வாழ்க்கைக்கான கற்றலை விருத்தி செய்ய வேண்டிய அவசியத்தையும் அதற்கான பயிற்சிகளையும் கொரொனா முடக்கல் வழங்கியுள்ளது.

இத்தகைய நிலைமைகளைக் கருத்திற் கொண்டு எமக்கேயான கல்வி பற்றி நாம் உரையாட வேண்டியது அவசியமாகியுள்ளது. உரையாடுவோம் ஆதிக்க நீக்கமற்ற சுயாதீன விடுதலைக்கான கல்வியைக் கட்டமைப்போம்.

கலாநிதி சி.ஜெயசங்கர், து.கௌரீஸ்வரன்
மூன்றாவதுகண் நண்பர்கள் குழு, வைகாசி 2020.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More