கொரோனா காரணமாக இந்தியாவில் காசநோய் உயிரிழப்புகள் 95 ஆயிரம் அதிகரிக்கும் என ஆய்வு ஒன்றின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள லங்காஸ்டர் பல்கலைக்கழகமும், லண்டன் மருத்துவ கல்லூரியும் இணைந்து கொரோனா வைரஸ், காசநோயில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மேற்கொண்ட ஆயிவின் முடிவில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
உலக காசநோய் பாதிப்பில், சீனா, இந்தியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் 40 சதவீத பாதிப்பு ஏற்படுகிறது எனவும் காசநோயும், கொரோனா வைரசை போலவே, நோயாளியின் வாய், மூக்கில் இருந்து வெளியேறும் நீர்த்திவலைகள் படுவதால் மற்றவர்களுக்கு பரவுகிறது எனவும் தலைமை ஆராய்ச்சியாளரான லண்டன் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் பின் மெக்குவாய்ட் தெரிவித்துள்ளார்.
ஆனால், தற்போது, உலகம் முழுவதிலும் ம் கொரோனா சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதனால் காசநோய்க்கான பரிசோதனையும், சிகிச்சையும் குறைந்துவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த, நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் காசநோய் சிகிச்சை கிடைப்பது இல்லை எனவும் இந்த சுகாதார சேவை குறைபாடு காரணமாகவும், பரிசோதனை மற்றும் சிகிச்சையில் ஏற்படும் தாமதம் காரணமாகவும் காசநோய் உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் காசநோய் தொடர்பான உயிரிழப்புகள் ஏற்படும். இது, 2 லட்சமாக கூட உயரும்.
இந்தியாவில் கூடுதலாக 95 ஆயிரம் பேரும், சீனாவில் கூடுதலாக 6 ஆயிரம் பேரும், தென்னாபிரிக்காவில் கூடுதலாக 13 ஆயிரம் பேரும் காசநோய்க்கு பலியாவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார் #இந்தியா #காசநோய் #உயிரிழப்பு #ஆபத்து #கொரோனா