கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஏமனில் லட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினிக்குத் தள்ளப்படலாம் என ஐ.நாவின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
ஏமனில் 20 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை இந்த வருட இறுதியில் 20 வீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் நிதித் தட்டுப்பாடு நிலவுவதால் ஏமனில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினிக்குத் தள்ளப்படலாம் எனவும் ஏமனில் உள்ள சுகாதார அமைப்புகள் கொரோனா வைரஸைச் சமாளிக்கப் போராடி வரும் சூழலில் அங்கு குழந்தைகளின் நிலைமை மிக மோசமடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமனில் கொரோனா தொற்றால் இதுவரை 1,076 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 288 பேர் பலியாகியுள்ளதுடன் 386 பேர் குணமடைந்துள்ளனர்.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்ற காரணத்தினால் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #கொரோனா #ஏமன் #குழந்தைகள் #பட்டினி #அபாயம் #யுனிசெப்