ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பொலிசார் தடியடி – சென்னைக் கடற்கரையை அண்மித்துள்ள பல பகுதிகளில் வன்செயல்கள்
ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் இன்று திங்கட்கிழமை காலையிலிருந்து முயன்று வருகின்ற நிலையில் சென்னைக் கடற்கரையை அண்மித்துள்ள பல பகுதிகளில் வன்செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னை கடற்கரையை அண்மித்த ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், பட்டினப்பாக்கம் போன்ற பகுதிகளில் வன்செயல்கள் நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மெரீனா கடற்கரை சாலைக்கு வரும் அனைத்து பகுதிகளும் அடைக்கப்பட்டதனையடுத்து பேரணியாக சென்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும் மாணவர்கள் போர்வையில் புகுந்த சிலர் காவல்துறையினர் மீது கல் வீசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து தடியடி நடத்தியும், கண்ணீர் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்த நிலையில் விவேகானந்தர் இல்லத்திற்கு பின்புறம் இருந்த ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்திற்கு இனம்தெரியாத சிலர் தீ வைத்ததாகவும் மேலும் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் சில தேவையில்லாத விஷமிகளால் வன்முறையாக மாறியுள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் மீது கை வைக்காதீர்கள்.. பொலீஸ் தடியடிக்கு கமல் கண்டனம்!
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் தடியடி தவறான செயல் என நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், “இது தவறானது. மாணவர்கள் மீதான போலீசாரின் ஆக்ரோஷ நடவடிக்கை, நல்ல பலனை தராது” என கூறியுள்ளார்.
லாரன்ஸ் கூறுகையில், மக்கள் கடலை நோக்கி ஓட வேண்டாம். பாதுகாப்பாக இருக்கவும் என கூறியுள்ளார். அவர் நேரடியாக மெரினாவுக்கு செல்ல முற்பட்டபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
பொலீஸ் தடியடியால் வன்முறையாக மாறிய ஜல்லிக்கட்டு போராட்டம்.. ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்திற்கு தீவைப்பு:
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கடந்த ஒரு வாரகாலமாக அமைதியாக நடைபெற்ற போராட்டம் இன்று சென்னை உள்ளிட்ட தமிழகம் எங்கும் வன்முறையாக மாறி விட்டது. இதற்கு முக்கியக் காரணம் காவல்துறையினரின் திடீர் நடவடிக்கை. மெரீனா கடற்கரை சாலைக்கு செல்லும் அனைத்து பகுதிகளும் அடைக்கப்பட்டன. இதனையடுத்து பேரணியாக சென்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மாணவர்கள் போர்வையில் புகுந்த விஷமிகள் சிலர் காவல்துறையினர் மீது சிலர் கற்களை வீசவே, இதில் சில காவலர்கள் காயமடைந்தனர்.
இதனையடுத்து தடியடி நடத்தியும், கண்ணீர் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த நிலையில் விவேகானந்தர் இல்லத்திற்கு பின்புறம் இருந்த ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்திற்கு மர்மநபர்கள் சிலர் தீ வைத்தனர். இதில் தீ காவல் நிலையத்திற்குள் மளமளவென பரவியது. 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கண்ணாடியை உடைத்துக்கொண்டு சென்ற தீயணைப்பு வீரர்கள், காவல்நிலையத்திற்குள் இருந்த இரண்டு பெண் காவலர்களை மீட்டனர். இதனால் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. மீண்டும் நடத்தினர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் சில தேவையில்லாத விஷமிகளால் வன்முறையாக மாறியுள்ளது.
கோவையில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி… பதட்டம்
கோவை வஊசி மைதானத்தில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது பொலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு நீரந்தர தீர்வு காண வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தீவிரப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 8 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வந்தது
இந்நிலையில் இன்று காலை தமிழகம் முழுவதும் உள்ள போராட்டக் களங்களில் அதிரடியாக குவிந்த போலீசார் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். கோவை வஊசி மைதானத்தில் திரண்டிருந்த மாணவர்களை போலீசார் போராட்டத்தை கைவிட்டு கலைந்துபோக கூறினர். இதற்கு மாணவர்கள் உடன்படாதால் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவர் போராட்டக்களத்திலேயே தீக்குளிக்க முயன்றார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே போலீசார் நடத்திய தடியடியால் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மயக்கமடைந்தனர். அவர்களை சக போராட்டக்காரர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தாக்குவதா.. கண்டித்து சென்னையில் பொதுமக்கள் சாலை மறியல்:
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்துவதா என்று கொந்தளித்த பொதுமக்கள் சென்னையின் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கோரி உறுதியான போராட்டத்தை தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் நடத்தி வந்தனர். அவர்கள் அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கியும், தடியடி நடத்தியும் பொலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி மற்றும் கல்வீச்சை போலீசார் நடத்தினார்கள். இதனால் சென்னையில் உள்ள பொதுமக்கள் வெகுண்டெழுந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அறவழியில் அமைதியாக போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள் மீது எப்படி தடியடி நடத்தலாம் என்று கேள்வி கேட்டு பொதுமக்கள் தன்னெழுச்சியாக ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கோடம்பாக்கம், கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போன்று தரமணியில் டைடல் பார்க் முதல் சோழிங்கநல்லூர் வரை ஆங்காங்கே சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய பகுதிகளிலும் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, இந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, பதற்றமும் நிலவி வருகிறது.
போராட்டக்காரர்கள் மீது தடியடி.. போலீசாரை கண்டித்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்:
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் குதித்ததையடுத்து தமிழக அரசு பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்த நிலையில், இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று கல்லூரிக்கு சென்ற பொன்னேரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து இந்த உள்ளிருப்பு போராட்டத்தை மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.
இதே போன்று சென்னையில் மெரினா கடற்கரைப் பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டிருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. இந்தப் பகுதியில் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி பொலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும், போராட்டக்காரர்கள் மீது பொலீசார் கல்வீச்சும் நடத்தினார்கள். இதனையடுத்து, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்டப் பகுதிகள் போர்க்களம் போல் காட்சி அளிக்கின்றன. எனவே, இந்தப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டிருந்தாலும் மாணவர்கள் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு கலவர பூமி போல காட்சி அளிப்பதால் இப்பகுதியில் வசிப்பவர்கள் பள்ளிகளுக்கு தங்களது குழந்தைகளை அனுப்பாமல் வீட்டிற்குள் வைத்துள்ளனர். மெரினா கடற்கரை பகுதியில் ராணி மேரி கல்லூரி, மாநிலக் கல்லூரி, லேடி விலிங்டன் மேல் நிலைபள்ளி, மார்டன் பள்ளி உள்ளிட்ட மிக முக்கியமான கல்விக் கூடங்கள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.