ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வெளியேற்று நடவடிக்கையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணைக்குழு தமிழக அரசிடம் விளக்கம் கோரியுள்ளது.
ஜல்லக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இஞைர்கள் தொடர் போராட்டம் மேற்கொண்டிருந்தநிலையில் நிரந்தரச் சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து பல இடங்களில் போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்தநிலையில் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வெளியேற்றும் போது காவல்துறையினர் போராட்டக்கார்கள் மீது நடத்திய தடியடியில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர். தடியடியைக் கண்டித்து பல பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்திய வேளை அவர்கள் மீது காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், மெரீனா கடற்கரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டி உள்ளிட்ட வாகனங்களை காவல்துறையினர் தடியால் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் முச்சக்கர வண்டிகளுக்கு காவல்துறையினரே தீ வைக்கும் சம்பவங்களும் நடந்துள்ளது.
இந்நிலையில், வன்முறை ஏற்பட்டபோது காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டு தமிழக தலைமைச் செயலர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
அத்துடன் போராட்டம் நடந்த மெரினா கடற்கரையில், தமிழ்நாடு மனித உரிமை ஆணையக் குழுவினர் இன்று ஆய்வு செய்ததுடன் போராட்டத்தின்போது தடியடி நடத்தப்பட்டது குறித்தும், காவல் நிலைய தீ வைப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்த உள்ளனர்.