இலங்கையில் மேலும் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 38 பேருக்கும், பேலியகொடை மீன் சந்தை மற்றும் மீன்பிடித் துறைமுக தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 99 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6946 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பிலிருந்த சென்ற ஐவர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்…
ஹற்றன் பொது சுகாதார பரிசோதகரினாலே 31/10 இன்று டிக்கோயா பகுதியை சேர்ந்த ஐவர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நோட்டன், நோர்வூட் உள்ளிட்ட பல பகுதிகளிற்கு கொழும்பிலிருந்து சென்றவர்களின் தகவல் பிரதேச மக்களினூடாக கிடைக்பெற்றுள்ளதாகவும் அவர்களதும், காவற்துறையினரதும் உதவியுடன் சுயதனிமைக்குட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார். மேலும் தங்களது பிரதேசத்திற்கு கொழும்பிலிருந்து வந்ததிருந்தால் உடனடியாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறும் அதிகாரிகளினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பிரபல தொழிற்சாலை ஒன்றின் ஊழியருக்கு கொரோனா!
ஹொரணை பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னணி தொழிற்சாலை ஒன்றின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, அவரிடம் நெருங்கிப் பழகிய 170 க்கும் அதிகமானோர் இன்று (31.10.20) மாலை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
குறித்த தொழிற்சாலையின் 20 ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பிசிஆர் பரிசோதனையின் போது குறித்த நபருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பணிபுரியும் நிலையில் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஹொரணை பிரதேசத்தில் மேலும் 24 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 355 கொவிட் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக களுத்துறை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் உதய ரத்நாயக்க தெரிவித்தார்.
அவர்களில் 50 பேர் மத்துகம பிரதேசத்திலிருந்து பதிவாகியுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறிய 454 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்…
ஊரடங்கு உத்தரவுக்கு முன்னர் மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறிய 454 பேர் நாட்டின் பல பகுதிகளில் கண்டறிப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர், பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பண்டாரவளை, மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம், தங்காலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் சுற்றுலா விடுதிகளில் தங்கியிருந்த நபர்களே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்..
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு அதற்கு முன்னர் கடந்த 29 ஆம் மற்றும் 30ம் திகதிகளில் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய நபர்களை தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா
சுகாதார அமைச்சின் ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைவாக அவருடன் நெருங்கி பழகியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
புளத்கோஹுபிடியவில் 11 பேருக்கு கொரோனா
புளத்கோஹுபிடிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புளத்கோஹுபிடிய மற்றும் லெவல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புளத்கோஹுபிடிய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் அமில குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் 30 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் 11 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களில் அநேகமானோர் மீன் சந்தைகள் உடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர்களுடன் நெருங்கி பழகியவர்களை தேடுவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவித்த அவர்,
அதன்படி புளத்கோஹுபிடிய மற்றும் லெவல பிரிவுகளில் 24 மணி நேரத்துக்கு குறித்த நபர்களை கண்டுபிடிக்கும் வரையில் பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பட்டார்.