யாழ். மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தமிழர்களின் மரவுரிமைச்சின்னங்களை, ஒப்பந்த அடிப்படையில் பாதுகாக்கும் உரிமையை, மாநகர சபைக்கு வழங்க வேண்டுமென மாநகர முதல்வா் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கோாிக்கை விடுத்துள்ளாா்.
யாழ். மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட இடங்களிலுள்ள தமிழர்களின் மரவுரிமைச்சின்னங்களைப் பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பாக, நேற்று (01) தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் மேற்படி கோாிக்கையை விடுத்துள்ளாா்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், தமது வரலாறுகளை அடுத்த சந்ததிக்குக் கடத்துவதற்கு ஏதுவானவகையிலும் தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள மரவுரிமைச் சின்னங்களை தாமே பாதுகாக்கும் நோக்குடனும், அந்த மரவுரிமைச்சின்னங்களைப் பாதுகாக்கின்ற, பராமரிக்கின்ற பொறுப்பை தமக்கு வழங்க வேண்டுமெனத் தொிவித்துள்ளாா்.
குறித்த மரவுரிமைச்சின்னங்களை முழுமையாக கையளிக்காது விடினும், ஒப்பந்த அடிப்படையில், அவற்றை பாதுகாக்கின்ற உரிமையை, மாநகர சபைக்கு வழங்குமாறும் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
அதற்கு பதிலளித்த தொல்பொருள் திணைக்கள அதிகாரி, இது தொடர்பில் கோரிக்கை கடிதமொன்றைத் தருமாறும் அதற்குரிய அனுமதியினைப் பெற முயற்சிப்பதாகவும் தொிவித்தாா்.
இக்கலந்துரையாடலின் போது, முக்கியமாக சங்கிலியன் அரண்மனை, சங்கிலியன் தோப்பு மற்றும் வளைவு, யமுனா ஏரி ஆகிய தமிழர் மரவுரிமைச்சின்னங்களைப் பாதுகாத்து, பாராமரிப்பது தொடர்பில் யாழ்.மாநகர சபையும் தொல்பொருள் திணைக்களமும் ஓர் இணைக்கப்பாட்டுக்கு வருவது குறித்து முடிவு எடுக்கப்பட்டதுடன், குறித்த இடங்களில், அந்த மரவுரிமைச்சின்னங்களின் வரலாற்றை மூன்று மொழிகளிலும் இடுவது தொடர்பிலும் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.
மேலும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07), யாழ்.கோட்டைப்பகுதியைச் சுற்றியுள்ள வெளிப்பகுதி குறிப்பாக, முத்தவெளிப் பகுதியில் வளர்ந்திருக்கின்ற பாதீனியச் செடிகள் மற்றும் புற்களை யாழ்.மாநகர சபையும் தொல்பொருள் திணைக்களமும் இணைந்து அகற்றித் தூய்மைப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. #யாழ்மாநகரசபை #மரவுரிமைச்சின்னங்களை #மணிவண்ணன் #முதல்வா்