பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த காவல்துறையினா் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை காவல்துறையினா் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கொவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் காவல்துறையினரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன.
காவல்துறையினரின் விண்ணப்பத்துக்கு மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையிலான சட்டத்தரணிகள் முன்னிலையாகி கடும் ஆட்சேபனையைத் தெரிவித்தனர்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராயந்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன்,
காவல்துறையினரின் விண்ணப்பத்தை ஏற்று தடை உத்தரவு வழங்கி கட்டளை வழங்கினார்.
பேரணியில் பங்கேற்போர் பல மாவட்டங்கள் ஊடாக அங்குள்ளவர்களையும் இணைத்து வருவதனால் கொவிட் -19 நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால்
இந்த தடை உத்தரவு வழங்கப்படுகிறது என்று நீதிவான் கட்டளையில் சுட்டிக்காட்டினார்.
இந்தப் போராட்டம் மூன்றாம் நாளான இன்று காலை திருகோணமலையில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது.
நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை பொலிகண்டியை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது #பருத்தித்துறை #ஆர்ப்பாட்டங்கள் #பேரணிகளுக்கு #தடை #பொத்துவில் #பொலிகண்டி