Home இலங்கை பாடல்வழி மலையகத்தை எழுச்சிப்பெறச் செய்த பெண்ணாளுமை மீனாட்சியம்மாள்! இரா.சுலக்ஷனா.

பாடல்வழி மலையகத்தை எழுச்சிப்பெறச் செய்த பெண்ணாளுமை மீனாட்சியம்மாள்! இரா.சுலக்ஷனா.

by admin


கலை கலைக்காக என்ற நிலையிலிருந்து விடுபட்டு சற்று வித்தியாசமாக, கலை வாழ்க்கைக்காகவும்தான் என்று வாழ்பவர்கள், கலாபூர்வமானதொரு உலகத்தின் இருப்பிற்கும், இயக்கத்திற்கும் என்றும் வழித்துணைப் புரிபவர்கள். கலை வாழ்க்கைக்காக என்ற நிலைப்பாட்டில் நின்று செயலாற்ற முற்படுகின்ற போது, வாழ்க்கைக்கும் கலைக்குமான உயிரோட்டமானத் தொடர்பு இன்னும் உறுதியுடையதாய், வலுவூட்டப்படுகின்றது.


கலையே வாழ்க்கைக்காகத்தான் என்ற நிலைப்பாட்டில் தான், வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதுகளிலும் தான் கண்டு, கேட்டு, உணர்ந்து அனுபவித்த அத்துனை அம்சங்களையும் கொண்டு, உயிரோட்டமுடைய ஓவியமாக்குகிறார் ஒருவர்; கவிமொழிவழி கவித்துவம்நிரம்ப கவிப்புனைகிறார் மற்றொருவர்; கவிக்கு இசைக்கூட்டி இசைக்கிறார் வேறொருவர்; இசைக்கூட்டிய பாடலுக்கு அசைசெய்து நடமிடுகிறார் இன்னுமொருவர்; வார்த்தை வல்லமை கொண்டு, சொற்சிலம்பம் தொடுக்கிறார் மற்றொருவர்.

வேறொருவரோ கண்டது அசலா, நகலா என பிரம்மிப்பில் ஆழ்த்த சிலையாக வடிக்கிறார். இப்படி வாழும்நொடிகளில், கலாப்பூர்வமான வெளிப்பாடுகளை, வாழ்விலிருந்து எடுத்துவடித்து தனக்கேயான கைவந்த வடிவில் படைப்பாக்கஞ் செய்துவிடுகின்றனர் கலைஞர்கள்.
மேற்சொல்லப்பட்ட கலைஞர்கள், நமது பொதுப்புத்தியில், கலைஞர்கள் என்று சொன்னவுடன், தெரியவருகின்ற அல்லது வாய்ப்பாடாக ஞாபகத்திலிருந்து சொல்லப்படுவர்கள் தாம். எனினும், அவர்களும் கலைஞர்கள் என்பதில் மறுத்துரைக்கவென்று ஒன்றுமில்லை. ஆனால், கலைஞர்கள் என்றவரிசையில், எமது பண்பாடு என்று கொண்டாடிக் கொண்டிருக்கின்ற பண்பாட்டில், தீண்டாமை என்னும் சாதி நிமித்தமும் இன்னும்பிற சமுகக்கட்டுபாடுகளாலும், கலைஞர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதில், தாமாகவே பின்நோக்கிச் செல்லவேண்டிய அல்லது தமது கலையையே கைவிடவேண்டிய சூழ்நிலையில் இருந்த கலைஞர்களும், இருக்கின்ற கலைஞர்களும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்; வாழ்ந்து வருகின்றார்கள் என்பது நினைக்கப்பட வேண்டியது. இவர்களும் கலைஞர்கள் என்றவரிசையில், பதியப்படவேண்டியவர்கள்.


இன்றைய சமகாலச்சூழலில், கலைத்துறை சார்ந்தவர்கள் காகித்தின்வழி தீர்மானிக்கப்படுகின்ற நிலையில், வாழ்நாள் முழுவதும் வாழ்க்கையே கலையாகக் கொண்டு வாழ்கின்ற கலைஞர்கள் என்பவர்களின் நிலைப்பாடு, மறைக்கப்பட்டதாக, மறுக்கப்பட்டதாக இருப்பதை அவதானிக்கமுடிகின்றது. ஒரு சமுதாயத்தின், வரலாற்று ஆவணமாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற கலைஞர்கள், ஏட்டின்வழி, சான்றிதழ் என்ற ஏட்டின்வழி மிகஇலாவகமாகத் தூக்கியெறியப்படுகின்றார்கள். இந்நிலையில் இலைமறைக்காயாகவே, அவர்கள் வாழ்ந்துமடியும் மிடிமைநிலையும் சமுகத்தில் நிலவிக்கொண்டுதான் இருக்கிறது.
சமுதாயத்தில், கலையென்றாலே ஆண்நிலை சார்ந்ததாக, பெரும்பாலும் பெரும்பான்மை வழக்கில், கலைஞன் என்று ஆண்பால்நிலை சார்ந்து அடையாளப்படுத்திக் கொள்ளும் சமுகத்திற்கே இந்நிலை என்றால், பெண்களின் நிலை என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

குறிப்பாக பாரம்பரியவெளிகளில், தம் பாரம்பரியகலைகளின் வழி, தெரியவருகின்ற பெண்கள், பெண்கலைஞர்கள் என்பது பண்பாட்டரசியலின்வழி மிகமிகநுட்பமாக, மறைக்கப்பட்டிருப்பதை வரலாற்றினை அணுகிஆராய்கின்ற போது தெள்ளெனத் தெளிகிறது.
எமது பண்பாடு என்று கொண்டாடிக் கொண்டிருக்கின்ற பண்பாட்டுவெளியில், சமத்துவமற்ற பண்பாட்டுவெளியில் நின்றுகொண்டு, போலித்தனமான, சமத்துவம் என்று சொல்லப்படுகின்ற அல்லது நம்பவைக்கப்படுகின்ற பண்பாட்டுச் சூழலை கொண்டாடித்தீர்க்கும், முரண்நகைதான் இங்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இத்தகைய பண்பாட்டு வெளியில், மறைக்கப்பட்ட ஆளுமைகளை வெளிக்கொணருதலுக்கும், அவர்களை அறிதலுக்குமான சூழல் வாய்ப்பாகி இருக்கின்ற பின்னணியில், இக்கட்டுரை, “மலையகப் பெண்ணாளுமை மீனாட்சியம்மாள்” குறித்து பேசவிளைகின்றது.


கோ. ந. மீனாட்சியம்மாள் என்றறியப்படும், மலையகப் பெண்ணாளுமை மீனாட்சியம்மாள் குறித்து பேசவிளையும் முன்னம், வரலாற்றில், சைவபக்தியியக்க முன்னோடிகளில் காரைக்கால் அம்மையார் குறித்து இவ்விடத்தில் பேசிச்செல்வது பொருத்தமுடையதாய் இருக்கும். பல்லவர்பாண்டியர்க்காலத்தில், சைபக்திவெள்ளம் பிரவாகமெடுத்ததை, சைவபக்தியியக்கம் வளர்ச்சிகண்டதை, தமிழ்இலக்கியவரலாற்றில், பல்லவர்பாண்டியக்காலத்தை அனுகி, ஆராய்கின்றபோது தெரிந்துக் கொள்ளமுடியும். இதற்கு வித்திட்டவர், புனிதவதியார் என்ற காரைக்காலம்மையாரே.


இவர் அறிமுகஞ் செய்த பதிகம் என்ற இலக்கியவடிவமும், வெண்பா, கட்டளைக்கலித்துறை, விருத்தம் ஆகிய யாப்புகளும் தான், பல்லவர்க்காலத்தில் நாயன்மார்களால் பதிகங்கள் பாடப்படுவதற்கும், அதன்வழி சைவபக்தியியக்கம் வளர்க்கப்படுவதற்கும் அடிப்படையாயிற்று. எனினும் இத்தயை இலக்கியபேராளுமை வரலாற்றில், பேய்க்கோலம் தானே வேண்டிப் பெற்றுக் கொண்டதாகப் புனையப்பட்டிருப்பது பண்பாட்டரசியல்வழி நிகழ்த்தப்பட்ட ஒன்றே என்பது மனங்கொள்ளத்தக்கது.


இவ்வாறே மலையகச்சூழலில், பெண்களின் விடுதலை வேட்கைக்கு வழிசமைத்த மீனாட்சியம்மாள் நடேசையர், கும்மி, சிந்து ஆகிய இலக்கியவடிவங்களைக் கையாண்டு, பாடல்களை படைத்ததோடு, பெரும் இயக்கமாக மக்கள் ஒன்றுதிரளவும், பாரதி விடுதலைப் பாடல்களையும், தானே இயற்றிய பாடல்களையும் பாடி, பாடுப்பட்டவர். எனினும், காரைக்கால் போல் மீனாட்சியம்மாளும் வரலாற்றில், நடேசைய்யர் அளவிற்கு பேசப்படவில்லை என்பது மனங்கொள்ளத்தக்கது. HIS – STORY என்பதாக ஆண்களின் கதைகளாலேயே புனையப்பட்ட வரலாற்றில், பெண்களின் வரலாறுகள் புதைக்கப்பட்டிருக்கின்ற நிலைக்கு இஃது சான்றாகிறது.
1920 ஆம் ஆண்டு, இலங்கையின் மூத்தப் பத்திரிகையாளரான, கோ. நடேசையராகிய, தனது கணவருடன் மீனாட்சியம்மாள் இலங்கைக்கு வருகைத் தந்து அவருடன் சேர்ந்து மலையக விடுதலைக்காகப் பாடுபட்டவராக அறியப்படுகின்றார்.


தேசபக்தன் பத்திரிகை, “பிரதம ஆசிரியரும் சொந்தக்காரருமாகிய கௌரவ நடேசையருக்காக அன்னாரின் மனைவி ஸ்ரீமதி கோ.ந. மீனாட்சியம்மாளால் அச்சிடப்பட்டு பிரசுரிக்கப்படுகின்றது.” என்ற குறிப்புடன் வெளியிடப்பட்டமையை பார்க்கின்றபோது, மீனாட்சியம்மாள், நடேசையரின் பணிகளில் துணைநின்றமையை அறியமுடிகின்றது. தஞ்சாவூரிலிருந்து இலங்கைக்கு வருகைத்தருகின்ற, மீனாட்சியம்மாள், நடேசையர் இணைந்து, தோட்டங்கள் தோறும் சென்று பிரச்சாரநடவடிக்கைகளில் ஈடுபட, புடவை விற்பவர்கள்போல் வேடந்தறித்து சென்றதாகவும், அங்கு மீனாட்சியம்மாள் படித்துக்காட்டி பிரச்சாரநடவடிக்கையில் ஈடுப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.


ஆங்கிலப்புலமையும், தமிழ்ப்புலமையும் கைவரப்பெற்ற மீனாட்சியம்மாள், பாடல்களை இயற்றுவதிலும், அதனை பாடுவதிலும் வல்லவராக இருந்தார். இதன்பேறாக நடேசையர், பிரச்சாரங்களை மேற்கொள்ளும் முன்னம் அம்மையார் பாடல்களை பாடுவது வழமையாகவே இருந்தது. பாரதி பாடல்களில் இருந்தப் பிடிப்பு காரணமாக, அவரது பாடல்களைப்பாடுவதிலும், தொழிலாளர் விடுதலை, சமுக விடுதலை போன்ற தொனிப்பொருள்களில், தாமாகவே பாடல்களை இயற்றி பாடியும் பிரச்சாரங்களை மேற்கொண்டார். இவர் எழுதிய நூல்கள் என்ற வரிசையில், 1931 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தியத் தொழிலாளர் துயர் சிந்து, 1940 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை என்பன இடம்பெறுகின்றன.


இவ்வாறு பாடல்களுக்கூடாக அவர் தமது பிரச்சாரங்களை முன்னெடுத்தமைக்கு, “இலங்கைவாழ் இந்தியர்களின் நிலைமை வரவர மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. இலங்கை வாழ் இந்திய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக தீவிரமுடன் போராடவேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. இந்திய மக்களுக்கு எதிர்க்காலத்தில் வரவிருக்கும் ஆபத்தை உணர்த்தி அவர்களுக்கிடையே அதிலும் முக்கியமாக இந்தியத் தோட்டத் தொழிலாளர்களிடையே பிரசாரம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். அத்தகைய பிரசாரம் பாட்டுக்கள் மூலமாகச் செய்யப்படின் அதிக பலனளிக்கும். இதை முன்னிட்டே இன்று இலங்கைவாழ் இந்தியர்களின் நிலைமையை பாட்டுக்களின் மூலம் எடுத்துக்கூற முன் வந்துள்ளேன்.” என இந்தியர்களின் இலங்கை வாழ்க்கையின் நிலைமை என்ற சிறுநூலில் எழுதப்பட்ட முன்னுரையில் விளக்குகின்றார்.


இவர் எழுதிப் பாடிய தொழிலாளர் சட்டக்கும்மி, தொழிலாளர் நிலைமைகளை படம்பிடித்துக் காட்டுவதாக அமைகின்றது.
சட்டமிருக்குது ஏட்டிலே – நம்முள்
சக்தியிருக்குது கூட்டிலே
பட்டமிருக்கு வஞ்சத்திலே வெள்ளை
பவர் உருகுது நெஞ்சத்திலே
வேலையிருக்குது நாட்டிலே உங்கள்
வினையிருக்குது வீட்டிலே…
மலையகத்தின் முதலாவது தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்திற்கான, தொழிலாளர்களை அணிதிரட்டி அறிவூட்டி உணர்வு கொடுக்கும் பணியினை செவ்வனே மீனாட்சியம்மாள் மேற்கொண்டார். இலங்கைத் தேயிலைத் தோட்டங்களுக்கு நடேசையருடன் சென்று மக்கள்துயர்ப்படும் நிலையைக் கண்ணுற்ற அம்மை, துயர்நிலையை பாட்டாக வடித்தார். பாடல் பின்வருமாறு அமைந்திருந்தது.
தேயிலைத் தோட்டத்திலே – ஆ
தேயிலைத் தோட்டத்திலே
தேயிலைத்தோட்டத்திலே அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்துகின்றனரே – இந்த
மாதர் தன் நெஞ்சு கொதித்துக் கொதித்து
மெய்
சுருங்குகின்றனரே- அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ ஒரு
மருந்திதற்கில்லையோ – செக்கு
மாடுகள் போல் உழைத் தேங்குகிறார்
நாட்டை நினைப்பாரோ – எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே
அன்னை
வீட்டை நினைப்பாரோ – அவர்
விம்மி விம்மி விம்மி விம்மி
அழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே !
பாடலில், பாரதியின் கவிகளில் அம்மையாருக்கு இருந்த ஈர்ப்பினை நன்குணர முடியும்.
நடேசையரின் பிரச்சாரப்பணிகளில், முன்னின்று செயற்பட்ட அம்மையார், 1931 ஆம் ஆண்டு நடேசையர், அரசாங்க சபைத் தேர்தலில் போட்டியிட்ட போது, துண்டுபிரசுரங்கள் சிவப்பு நிறத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. அந்த பிரசாரங்களில் அம்மையார்,
பார்ப்பான் பார்ப்பானென்று- நீங்கள்
பல தடவை சொன்னாலும்
பார்ப்பான் அல்லவென்று அய்யர்,
பறையடித்துச் சொல்லலையே
தமது கணவரின் நிலை விளக்கிப் பாடியதோடு,
பனையைச் சேர்ந்தானோ அல்லது
பழங்கள் விற்றானோ
தொழிலாளர் கஷ்டங்களை
தொலைக்க பாடுபட்டவரை
பழியாகப் பேசி நீங்கள்
பச்சை நோட்டீஸடித்து மெத்த
பசப்புவதேனோ அம்மா
உசுப்புவதேனோ
என நடேசையர் பார்ப்பனன் என்றும், ஐயரை நம்பி தோட்ட மக்கள் போராட நினைப்பது தற்கொலைக்கு சமமானது என்று தோட்டத்துரைமார்கள், சொல்லி ஊழியன் என்ற எதிர்ப்பு இதழை வெளியிட்ட காலத்தில், மேற்கண்ட பாடலை பாடி, மீனாட்சியம்மை மக்களை விழிப்படையச் செய்தார்.


பாய்க் கப்பல் ஏறியே வந்தோம் – அந்நாள்
பலபேர்கள் உயிரினை யிடைவழி தந்தோம்
தாய் நாடென்றெண்ணி யிருந்தோம்
இவர்கள்
தகாத செய்கையைக் கண்டு மனமிக
நொந்தோம்
என இந்தியாவிற்கே மீண்டும் தொழிலாளர்கள் அணுப்பப்படுவதற்கானத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட காலத்தில், அதனை எதிர்த்து அம்மையார் பாடிய பாடலாக அமைகின்றது. இவ்வாறு பாடலுக்கூடாகவே, தொழிலாளர் விடுதலை, பெண்கள் விடுதலை என மலையச்சமுகத்தின் விடுதலைக்காக, இயக்கமாகவே தொழிற்பட்டவர் மீனாட்சியம்மாள். தோட்டங்கள் தோறும் சென்றும், பேருந்து தறிப்பிடங்களிலும், பொதுவிடங்களிலும் இவ்வாறு பாடலுக்கூடாக சமுகமாற்றத்தினை ஏற்படுத்த விளைந்தவர் மீனாட்சியம்மையார். பாடல்மட்டுமன்றி, தேசபக்தன் பத்திரிகையின் ஊடாக பெண்களின் விடுதலைக்காக பல்வேறு கட்டுரைகளையும் எழுதியமை குறிப்பிடத்தக்கது.
நிமிர்ந்த நன்னடை நேர்க் கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்
என்ற பாரதியின் அடிகளின் வழி வெளிப்படும் பெண்ணாக, சமுகத்தின் மாற்றத்திற்காக, சமுகவிடிவெள்ளியாக நின்று, பாடல்வழி தனிப்பெரும் இயக்கமாக வாழ்ந்துகாட்டிய, மீனாட்சியம்மாள் என்னும் பெண்ணாளுமை, மலையகம் கொண்ட, கலைஞர்களில் ஒருவராகவும், மறவாமல் நினைவுக்கூறப்பட வேண்டியவர்.
இரா.சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More