செனற் உறுப்பினர்கள் கோரிக்கை பிரான்ஸில் உணவகங்களை மதிய வேளையிலாவது குறிப்பிட்ட நேரம் திறப்பதற்கு அனுமதிக்குமாறு செனற் உறுப்பினர்கள் 65 பேர் அதிபர் மக்ரோனிடம் கடிதம் மூலம் கேட்டிருக்க கின்றனர். தொற்றுப் பாதிப்புகள் குறைந்த மாவட்டங்களில் மதிய நேரங்களில் சுகாதார விதிமுறைகளுடன் உணவகங்களைத் திறப்பதற்கும் பின்னர் மாலை ஆறு மணிக்குப் பிறகு ஊரடங்கு வேளையில் உணவு விநியோகத்தை (take-away) செய்வதற் கும் அனுமதிக்கலாம் – என்று செனற் உறுப்பினர்கள் அந்தக் கடிதத்தில் ஆலோசனை வெளியிட்டிருக்கின்றனர்.உணவை எடுத்துச்சென்று விநியோகிக் கின்ற (take-away) முறை மூலம் நகரப் பகுதிகளைச் சேர்ந்த உணவகங்களே பெரிதும் பயனடைகின்றன. கிராமங்கள் மற்றும் வெளி இடங்களைச் சேர்ந்த உணவக உரிமையாளர்கள் பெரும் முடக்கங்களைச் சந்தித்துள்ளனர். அவர்களது நலன் கருதி மதிய வேளை களில் குறிப்பிட்ட நேரத்துக்காவது உணவகங்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும்.
தொழிலாளர்கள் மதிய உணவைப் பெறுவதற்கு அது உதவியாக இருக்கும். -இவ்வாறு அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றுவதற்கு மிக வாய்ப்பான இடங்களில் முக்கியமானவை என்று சுகாதார அறிவியலாளர்களால் அடையாளம் காணப்பட்ட உணவகங்கள், அருந்தகங்கள் என்பன முழுமையாக இயங்குவது நீண்டகாலமாகத் தடுக்கப்பட்டு வருகிறது.தயாரிக்கப்பட்ட உணவை வாடிக்கை யாளர்கள் எடுத்துச் செல்வதற்கு மட்டுமே (take-away) உணவகங்கள் அனுமதிக்கப் படுகின்றன. கடந்த ஆண்டு ஒக்ரோபர் தொடக்கம் உணவகங்கள் மூடப்பட் டிருக்கின்றன. இதேவேளை -தற்போது நடைமுறையில் உள்ள சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதா அல்லது அதிகரிப்பதா என்ற தீர்மானத்தை எடுப்பதற்கு இன்னமும் எட்டு முதல் பத்து நாட்கள் வரை பொறுத்திருக்க நாட்டின் அதிபர் மக்ரோன் முடிவு செய்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் வீடியோ மூலமாகக் கலந்துரையாடிய சமயத்தில் இத்தகவலை அவரே வெளியிட்டார் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.-
குமாரதாஸன். பாரிஸ்.20-02-2021