இலங்கையில் முதல் 10 பெரிய மாவட்டங்களில் ஒன்றான முல்லைத்தீவு மாவட்டம் பொருளாதார வளர்ச்சியில் கடைசி மாவட்டமாக அல்லது 24வது மாவட்டமாகவே ஆண்டுதோறும் இடம்பிடிக்கின்றமை அரசு இந்த மாவட்டத்தின் வறுமை ஒழிப்பில் நாட்டின் ஆட்சி முறமை சீரான நடவடிக்கையினையும் சீரான கவனத்தையும் செலுத்தவில்லை என்றே சுட்டிக் காட்டப்படுகின்றது.
இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 24 விதமே வனப்பகுதியாக காணப்படுகின்றது. இந்த அளவை 30 வீதமாக அல்லது 29 வீதமாகவேனும் அதிகரிக்க அரசு முயல்கின்றது. அரசின் இந்த முயற்சி வனப்பகுதியின் முக்கியத்துவத்தை உணர்ந்த அல்லது தேவைக்கான முயற்சி என அரசு கருதுகின்றதனால் இலங்கையிலேயே அதிக வனப்பகுதியில் இரண்டாவது இடத்தில் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் விளங்குகின்றது. இதனை பேனிப்பாதுகாக்க விரும்புகின்ற அரசின் ஆட்சி முறமையை ஒத்த விடயம். இங்கே ஆட்சி முறமையில் மழை, சூழல் பேணல், நாட்டின் வழிமண்டல சமநிலைக்காக எட்டப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு சீரான நடவடிக்கையினை கொண்டு செல்லவில்லை என்பதனையே எடுத்துக் காட்டுநிற்கின்றது.
மாவட்டத்தின் 70 வீத நிலம் அந்த மாவட்டத்திற்கு சொந்தமில்லை.
முல்லைத்தீவு மாவட்டமானது 2 ஆயிரத்து 614 ச. கி. மீற்றர் பரப்பளவை உடைய 6 பிரதேச செயலாளர் பிரிவைக் கொண்ட மாவட்டம். அதாவது 2 லட்சத்து 69 ஆயிரத்து 300 கெக்டேயர் நிலமாகும். இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் ஆளுகையில் உள்ள பிரதேசம் மட்டும் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 721 கெக்டேயர் நிலம் உள்ளது. இது மாவட்டத்தின் மொத்த நிலத்தின் 66.37 வீதமாகும். இங்கே எஞ்சியுள்ள 34 விகித நிலத்தில் 13 விதமான நிலம் அதாவது 35 ஆயிரத்து 403 ஏக்கர் வயல் நிலமாகவுள்ளது. 4.6 விதமான நிலம் சதுப்பு நிலமாகவும் உள்ளதோடு எஞ்சிய நிலப்பரப்பே மாவட்ட மக்களின் வாழ்வாதாரம், அரச, தனியார. நிர்வாக மையங்கள், பாடசாலைகள், ஆலயங்கள் என அனைத்து பயன் பாட்டிற்கும் உள்ளது.
இவ்வாறு ஒரு மாவட்டத்தின் 70 வீதமான நிலத்தை தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுள்ள மத்திய அரசின் ஒரு தேசிய கொள்கை திட்டத்திற்காக முல்லைத்தீவு உட்பட சில மாவட்டமே உதவுகின்றது என்பதனை அறிந்தும் இந்த மாவட்ட மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையான வாழ்வியல், இல்லிடம், மருத்துவம் என்பவற்றை போக்காத காரணமே மாவட்டம் தொடர்ந்தும் பின்னடைவை சந்திக்க காரணமாகின்றது.
வனத்தை மட்டுமன்றி 78 குளத்தையும் உரிமை கோரும் வனவளத் திணைக்களம்.
வாழ்க்கைக்கான அடிப்படை தேவையை பூர்த்தி செய்யாத அரசு இருப்பதனையும் தடுக்கும் வகையிலேயே செயற்படுவதாக மாவட்ட விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அதாவது முல்லைத்தீவில் நடுத்தரக் குளங்கள் யாவும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆளுகையிலேயே உள்ளது. இதற்காக வர்த்தமானி அறிவித்தலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்திடம் 273 குளங்கள் காணப்படுகின்றது. இதில் தற்போது 195 குளங்கள்தான் இந்த திணைக்களத்தின் ஆளுகையில் உள்ளது. இவற்றையே மாவட்ட விவசாய செய்கைக்கு அனுமதிக்கப்படுகின்றது. எஞ்சிய 78 குளங்களும் தமது ஆளுகைப் பகுதிக்குள் இருப்பதாக தெரிவித்து கமநல சேவைத் திணைக்களத்தை எந்த நடவடிக்கைகளிற்கும் வனவளத் திணைக்களம் அனுமதிப்பது கிடையாது அதனால் குளமும் பாழடைய விவசாயமும் பாழ் அடைந்து மக்களின்வாழ்வியல் கேள்விக்குறியாகி நிற்பதோடு போரின் அனைத்தையும் இழந்து மீளத் துடிக்கும மக்களின் வாழ்வியலை நசுக்கி ஒரு பெரும் சட்ட மீறலையே ஏற்படுத்துகின்றது.
இந்தகைய நெருக்கடி நிலவும் மாவட்டத்தில் தற்போது மேலும் 12 ஆயிரம் ஏக்கர் அதாவது 5 ஆயிரம் கெக்டேயரை தமக்குச் சொந்தமானது என வர்த்தமானி பிரசுரிக்க சகல நடவடிக்கையினையும் வனவளத் திணைக்களம் பூர்த்தி செய்து தலமை அலுவலகத்திற்கு கடந்த ஆண்டு அனுப்பியும் விட்டது.
குறி வைக்கப்படும் மற்றுமோர் கனிய வளம்.
அதிக வறுமையில் வாடும் மாவட்டத்தில் தற்போது மேலும் ஒரு முக்கிய கனிய வளத்தை 2016இல் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டதனால் மாவட்டத்தின் வளர்ச்சகிக்கு பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் கோரியபோதும் அதனைப் புறக்கணித்து இரகசியமாக மத்திய அரசின் கீழ் உள்ள கனியவள காட்டும் தாபனத்தின் கீழ் கொண்டு செல்ல முயற்சிக்கப்படுகின்றது.
இத்தனை வளம்மிக்க ஒரு மாவட்டம் ஏன் இலங்கையின் பொருளாதாரத்தில் கடை நிலையில் உள்ளது என யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் புவியியல் துறை வாழ்நாள் பேராசிரியருமான பொன்.பாலசுந்தரம்பிள்ளை தனது கருத்தை தெரிவிக்கையில்,
விவசாயமும், மீன்பிடியும் மட்டுமே நம்பி இருப்பதே முல்லைத்தீவு மாவட்டத்தின் முதலாவது பின்னடைவு. மீ்ன்பிடியில் முதலாளி வேறுநபராக இருப்பார் கடலிற்கு செல்பவர் தினக கூலியாளாகவே காணப்படுவார். அதனால் இதன் உழைப்பு வேறு மாவட்டத்திற்கே அதிகம் செல்லும். இதேபோன்று மிக அடிப்படையான கல்வி , மருத்துவத்திற்காகவே வாழ்வில் அதிக நிதி செலவிடப்படும். அந்த இரண்டிற்குமே இந்த மாவட்டத்தின் நிதி வெளி மாவட்டங்களிற்கே செல்கின்றது . இவற்றை தடுக்க பாரிய கைத்த்தொழிற்சாலைகள், வைத்தியசாலைகள், கல்விக்கூடங்கள் வர வேண்டும்.
இதேநேரம் இவற்றை அதிகமாக கொண்டு வருவதற்கு குடிசன அடர்த்தியும் போதுமானதாக இல்லை. வேறு வருமானம் எனில்
மாவட்ட மக்கள் தொகை ஒரு லட்சத்து 50 ஆயிரம்தான் உள்ளது. இருப்பினும் அந்த மாவட்டத்தில் உள்ள பல ஆயிரம் பேருக்கு அங்கே நிலம் இல்லை. இதேபோன்று போருக்கு முன்னரே முல்லைத்தீவின் முக்கிய வருமானத்தில் காட்டுப்பொருளாதாரம் பெரும் பங்காற்றியது. இதில் விறகு, உடும்பு பிடித்தல், பாலைப்பழம், தேன் சேகரிப்பு போன்றவற்றுடன் மயில் இறகு, கரடி எண்ணை, பாம்பு எண்ணை, என அன்றே ஆயிரக் கணக்காண பெறுமதியில் வருமானத்தை ஈட்டியவர்கள் இன்று அவற்றை இழந்துள்ளனர். இவற்றை சட்டத்தின்பால் தடுப்பதில் மட்டும் கவனம் செலுத்திய அரசு அவற்றை மேற்கொண்டவர்களிற்கான மாற்று பொருளாதாரம் தொடர்பில் சிந்திக்கத் தவறிவிட்டன.
இவை அரச பக்கத் தவறுகளாக இருக்கும்போது அந்த மாவட்டத்தில் கல்வி கற்று மரீட்டின் அடிப்படைக்கு அப்பால் மக்கள் தொகையின் அடிப்படையில் பல்கலைக் கழகம் சென்றவர்கள்கூட அந்த மாவட்டத்தில் சேவையாற்ற முன்வராது வெளிநாட்டிற்கும் கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடத்தை நாடுவதும் பின்னடைவிற்கு மிக முக்கிய காரணமாகவே உள்ளது. என்றார்.
இதேநேரம் 1983ஆம் யூலை இனக் கலவரத்துடன் இடம்பெயர்ந்து சுதந்திரபுரம் பகுதியில் வசிக்கும் யோ.பவானந்தராசா என்னும் 5 பிள்ளைகளின் தந்தையான 61 வயது முதியவர் தெரிவிக்கையில்,
வன்னியில் வந்து குடியேறும்போது தாய், தந்தையருடன் வந்த எமக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அதன் பின்பு திருமணமாகி 5 பிள்ளைகளும் பிறந்த நிலையில் பிள்ளைகளிற்கு நிலத்தை பிறித்து வழங்க ஒரு ஏக்கர் வீதமே வழங்கினேன். அதனால் அவர்களாலும் வாழ்வாதாரத்தை தேட முடியவில்லை என்னாலும் தற்போது வாழ்வாதாரத்தை ஈட்ட முடியவில்லை. இதன் பின்பு எத்தனையோ தடவை நிலம்கோரி விண்ணப்பித்தோம் வாழ்வாதாரத்திற்காக இருப்பினும் கிடைக்கவில்லை இதனால் தற்போது குடும்பத்துடன் கூலி வேலைக்கே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. என்றார்.
இதேபோன்று ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பைச் சேர்ந்த பகலவன் என்னும் 41 வயதுக் குடும்பஸ்தர் தெரிவிக்கையில் எமது காலத்தில் வன்னியில் கூழா முறிப்பு ஓட்டுத்தொழிற்சாலை. பேராறு தும்புத் தொழிற்சாலை. வள்ளிபுனம் தும்புத் தொழிற்சாலை. என்பவற்றிற்கும் அப்பால் சேரன், சோழன், பாண்டியன், இளவேனில், மருதம் என நூற்றுக் கணக்காண நிறுவனங்கள் தொழிற்சாலைகள் இயங்கின. அப்போது எந்த வயதானாலும் ஆண், பெண் வேறுபாடு இன்றி பட்டதாரி முதல் சாதாரண கல்வி நிலைகளிற்கும் அப்பால் அனைவருக்கும் வேலை வாய்ப்பு இருந்ததோடு தொழிலாளருக்கு தட்டுப்பாடு நிலவியது . ஆனால் தற்போது வேலை வாய்ப்பு இன்மையே பெரும் பிரச்சணையாகவுள்ளது என்றார்.