இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக அதிகரித்து வருவதுடன் உருமாறிய கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதனால் பிரித்தானியா பயணத்தடைக்கான சிவப்பு பட்டியலில் (Red List) இந்தியாவை இணைத்துள்ளது.
பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் இந்தியப் பயணம் பயணம் ரத்து செய்யப்பட்டதனையடுத்து உடனடியாக இந்தியா இந்த பயணத்தடைக்கான சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா இந்தியாவை சிவப்பு பட்டியலில் இணைத்துள்ளதால், பிரித்தானியா மற்றும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களை தவிர ஏனையவா்கள் இந்தியாவில் இருந்து அந்நாட்டிற்குச் செல்ல அனுமதி கிடையாது.
வெளிநாட்டினருக்கு பிரித்தானியாவில் வீடு இருந்தால், அவர்கள் அதிகப்படியான பணம் செலுத்தி அரச அனுமதி பெற்ற தனிமைப்படுத்தல் விடுதிகளில் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தொிவிக்கப்பட்டுள்ளது.
இது எதிா்வரும் வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது.
“இந்தியாவை சிவப்பு பட்டியலில் சேர்ப்பது கடினமானது. ஆனால் முக்கியமான முடிவை எடுத்துள்ளோம்’’ என பிரித்தானிய சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹான்ஹாக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் இந்த பயணத்தடைக்கான சிவப்பு பட்டியலில் பங்களாதேஸ் மற்றும் பாகிஸ்தான் உள்ளன.