இந்தியாவின் பஞ்சாப், கோவா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் சுமார் 60 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய 5 மாநிலங்களில் இன்று முதல் அடுத்த மாதம் வரை பல்வேறு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
முதலில் பஞ்சாப், கோவா மாநிலங்களுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகின்றது. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 1,145 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 81 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில் பஞ்சாபை ஆளும் சிரோமணி அகாலி தளம் – பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவு கிறது.
இதேவேளை கோவா தேர்தலில் முதன்முதலாக 6 முன்னாள் முதல்வர்கள் போட்டியிடுகிறார்கள். அம்மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1, 642 வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர்.