காரைநகர் கடற்பரப்பில் கடந்த 18ஆம் திகதி உயிரிழந்த இந்திய மீனவரின் உடல் இன்று காங்கேசன்துறை ஊடாக தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. காரைநகர் கோவளம் பகுதிக்குள் 18ஆம் திகதி ஊடுருவிய இந்திய மீனவரின் படகு கடற்படையினரின் படகுடன் மோதியதில் இந்திய மீனவரின் படகு முழுமையாக கடலில் மூழ்கியது.
இதன்போது இரு இந்திய மீனவர்கள் மீட்கப்பட்ட போதும் , ஒருவர் காணாமல்போயிருந்தார். இவ்வாறு காணாமல் போன இந்திய மீனவரைத் கடற்படையினர் 18ஆம் திகதி இரவு மற்றும் 19ஆம் திகதிகளில் தேடுதலில் ஈடுபட்டு 20 ஆம்திகதி நண்பகல் கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அவ்வாறு காங்கேசன்துறைக்கு கொண்டுவரப்பட்ட உடலை காங்கேசன்துறைக்கு சென்ற தடயவியல் காவல்துறையினர் மற்றும் நீதிபதி சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்காக உடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
இதன் பிரகாரம் 20 ஆம் திகதி மாலை காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இரவு பிரேத பரிசோதனையும் இடம்பெற்று நீரில் மூழ்கியதனால் உயிரிழந்த்தாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அதன் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பித்து உடலம் தமிழகம் அனுப்புவதற்கான பணி இடம்பெற்றபோதும் உயிரிழந்த மீனவருடன் பயணித்த ஏனைய இரு மீனவர்களையும் விடுவிக்குமாறு விடப்பட்ட கோரிக்கையால் காலதாமதம் ஆகியது.
இந்நிலையில் இன்று காலை உயிரிழந்த தமிழக மீனவரின் உடலம் மட்டும் காங்கேசன்துறை ஊடாக இலங்கை கடற்படையினரால் காலை 9 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டு இந்திய கடற்படையிடம் உடலம் ஒப்படைக்கப்பட்டது. இதனை அடுத்து இந்திய கடற்படையினரால் உயிரிழந்தவரின் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டது.