மருந்துப் பற்றாக்குறையினால் ஏற்படும் பாரதூரமான சுகாதார அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய ஐந்து நடவடிக்கைகள் குறித்து சுகாதார செயலாளருக்கு அறிவிக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்றையதினம் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணுமாறு வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. நாட்டில் தற்போது நிலவும் மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களின் கடுமையான தட்டுப்பாடு வைத்தியசாலை நடவடிக்கைகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று உயிர்காக்கும் மருந்துகளுக்கும் 140 அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக மருந்துப் பொருட்கள் ஒழுங்குமுறை மற்றும் வழங்கல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, மாரடைப்பு நோயாளிகளுக்கான மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் வைத்தியசாலைகளில் இல்லை என வைத்தியர்கள் தொிவித்துள்ளனா். விபத்து சந்தர்ப்பங்களில் உயிர் இழப்பைத் தடுக்க பயன்படுத்தப்படுகின்றன. ஐ.சீ குழாய்கள் மற்றும் இண்டர்கோஸ்டல் குழாய் மற்றும் சிறுநீர்க்குழாய் பற்றாக்குறை உள்ளதுடன் நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் இன்சுலின் மற்றும் வலி நிவாரணியான மோர்பின் பற்றாக்குறையால் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் வைத்தியர்கள் தொிவித்துள்ளனா்.
இந்தநிலையில் இந்த பாரதூரமான சுகாதார அபாயத்தைக் கடப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய ஐந்து நடவடிக்கைகள் குறித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதாரச் செயலாளருக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை இறக்குமதி மருந்துப் பொருட்களின் விலைகளை 20 சதவீதத்தால் அதிகரிக்க மருந்து இறக்குமதியாளர்களுக்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், ஏற்கனவே விலைகள் அதிகரிக்கப்பட்ட மருந்துப் பொருட்களுக்கு இது பொருந்தாது எனவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.