கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் வாக்குறுதிக்கமைய போராட்டத்தை கைவிட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்தனர்.
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்றைய தினம் சனிக்கிழமை கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தமது உறவுகளான அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடி, விரைவில் விடுதலைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவித்ததை சிறையில் தமது உறவுகள் போராட்டத்தை கைவிட்டுள்ளதாகவும், அதனால் அவர்களுக்கு ஆதரவாக யாழில் தாங்கள் முன்னெடுத்த போராட்டத்தையும் கைவிடுவதாக அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்தனர் .
ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொலைபேசி வாயிலாக உண்ணாவிரதம் இருக்கும் சிறைக்கைதிகளுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதிகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் செப்டம்பர் 06ம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்களினுடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல்நிலை மோசமாவதை கருத்திற்கொண்டு தகுந்த வாக்குறுதியை அவர்களுக்கு வழங்கி உணவுத் தவிர்ப்பை முடிவுறுத்தி பிணையிலோ பொதுமன்னிப்பிலோ விடுதலை செய்யுமாறு உறவினர்கள் வேண்டுகோள் விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.