தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு இதுவரை காலமும் வழங்கப்படாத நிலையிலும் பொருளாதார பின்னடைவு நேரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறித்த அழைப்பை விடுத்துள்ளது .இது குறித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் கருத்து தெரிவிக்கையில்
பொருளாதார பின்னடைவு நேரத்திலும் பெருந்தொகையான பண செலவில் இரண்டாவது தடவையாக சுதந்திர தினத்தினை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏன் என கேள்வியெழுப்பினார்.
அதேவேளை குறித்த ஊடக சந்திப்பின் போது, தேர்தலுக்கு பணம் இல்லை என கூறி சுதந்திர தினத்துக்கு பணத்தை செலவளிப்பது ஏன் என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய உபதலைவர் இ.தர்சன் கேள்வியெழுப்பினார்.
அத்துடன் நாளைய தினம் சனிக்கிழமையை கரிநாளாக பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் நண்பகல் 12 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரையும் பங்கேற்குமாறு பல்கலைக்கழக மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்டது.